For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி.... பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்: கி. வீரமணி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்காததால் ஆகம பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக இன்று வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

Veeramani urges to appoint trained Archakars

இந்துக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் தகுதி அடிப்படையில் என்பதை வலியுறுத்தி தி.மு.க. ஆட்சி (2-12-1970)யில் நிறைவேற்றிய சட்டத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அப்போதும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்றும், அந்தப்படி அர்ச்சகராக நியமிக்கப்படுவது நியமனத்தைப் பொறுத்தவரை அது அரசுக்கு அதிகாரம் உள்ள ஒரு உரிமை (Secular act) மற்றபடி அந்த அர்ச்சகர்களால் நடத்தப்பட வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் இவைகளை தலைகீழாக மாற்றி ஏதோ (தலைகீழ்) "ஒரு புரட்சி" செய்து விடுவார்கள் என்றும் நாங்கள் கருதவில்லை.

அப்படி ஏதாவது நடக்கும் என்று இன்று அச்சப்படும் மனுதாரர்கள், அப்போது நீதிமன்றங்களை நாடி, பரிகாரம் தேட உரிமையுண்டு, எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் (தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை திருத்தச் சட்டம்) செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர்.

அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வும் தமிழக அரசின் ஆணையும் இது - அரசியல் அமர்வு பெஞ்சில் அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.எம். சிக்ரி, ஜஸ்டிஸ் ஏ.என். குரோவர், ஜஸ்டிஸ் ஏ.என். ரே, ஜஸ்டிஸ் டி.ஜி. பாலேகர், ஜஸ்டிர் எம்.எச். பெய்க் ஆகிய அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகும்.

அந்த தீர்ப்பில் எழுப்பப்பட்ட அச்சங்களைப் போக்கி, சமூக சீர்திருத்த அடிப்படையில் தான் தமிழக (தி.மு.க.) அரசு இந்த திருத்தத்தைக் கொணர்ந்து நடைமுறைப்படுத்த முற்படுகிறதே தவிர, "மத சீர்திருத்த அடிப்படையிலோ, மத விஷயங்களில் தலையிட்டு தலைகீழ் நடைமுறைகளைச் செய்யவோ முயற்சிக்கவில்லை" என்று தெளிவுபடுத்தும் வகையில், 2006இல் அமைந்த தி.மு.க. அரசு, முதலில் தனியே ஓர் ஆணை போட்டது;

(23.5.2006) அதன்படி தேவைப்படும் தகுதியும், பயிற்சியும் பெற்ற ஹிந்துவான எந்த நபரும், கோயில்களில் அர்ச்சகராக நியமனம் பெறலாம் என்று கூறியது.

அவசரச் சட்டமும், அதன்பிறகு கைவிடப்பட்டு, தனிச் சட்டமாகவே - சட்டத் திருத்தமாக (Act 15 of 2006) என்று கொண்டு வரப்பட்டது. இதனை சரியாக அமுல்படுத்த பரிந்துரைக்க செய்ய உயர்நிலைக் குழு ஒன்றை (High Power Committee) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் தலைமையில் கீழ்க்கண்ட இந்து சமயத்துறை வல்லுநர்களைக் கொண்டு நியமித்தது.

அந்தக் குழுவில், த.பிச்சாண்டி (அறநிலையத் துறை ஆணையர்) உறுப்பினர், செயலாளர் (பதவி வழி), தவத்திரு.தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக அடிகளார் (குன்றக்குடி ஆதீனம், உறுப்பினர்), பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் (உறுப்பினர்), சிறீரங்கம் சிறீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் (உறுப்பினர்), பிள்ளையார்பட்டி முனைவர் பிச்சை சிவாச்சாரியார் (உறுப்பினர்), திருப்பரங்குன்றம் கே.சந்திரசேகர பட்டர் (உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றனர்.

அந்தக் குழுவினர் பரிந்துரைகளை அளித்தனர். (ஆணை 23.5.2006 நியமனம் 10.6.2006).

அக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக தந்ததை தமிழ்நாடு அரசு ஏற்று (ஆணை எண் 1, 2007) ஆணையாகவும் வெளியிட்டது! இன்றும் அது செயல்பட எந்தத் தடையும் இல்லை.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழக (தி.மு.க.) அரசு 2006இல் நியமித்த அர்ச்சகர் நியமனம்பற்றிய (23.5.2006) ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் (அது ஆணையாகப் போடப்பட்ட உடனேயே அவசரமாக) ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கமும் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆணைக்கு எதிராக வழக்குப் போட்டு, தடை ஆணையும் பெற்றனர். (அந்த ஆணை பிறகு தனிச் சட்டமாக போடப்பட்டது; அதற்காகத் காத்திருக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து, வழக்குப் போட்டனர் (W.P. எண் 354 of 2006) அதை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் (ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா) கொண்ட அமர்வு விசாரித்து ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப்பின் 16.12.2015இல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

54 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், மனுதாரர்களான - ஆதி சைவ சிவாச்சாரியார்களின் சங்கத்தினரும், மற்றவர்களும் தமிழ்நாடு அரசின் 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் நியமன ஆணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களின் முக்கிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

இந்த தீர்ப்பின்படி தமிழக (திமுக) அரசு கொண்டு வந்த அர்ச்சகர் நியமன அரசு ஆணை செல்லும் என்றே விளங்கி விட்டது!

இந்தஆணையை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரிய, மனுதாரர்களின் மூன்று முக்கிய வாதங்களை தக்க விளக்கத்துடன் கூறி, ஏற்க மறுத்துள்ளது.

1) சட்ட மொழியில் சொல்லப்படும் (‘Res judicata' ' - அதாவது ஏற்கனவே முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்பட்டு விட்டதையே இந்த ஆணை மீண்டும் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த ஆணை ஏற்கத்தக்கதல்ல; செல்லாது என்பது மனுதாரர் வைத்த முதல் வாதம். அதனை ஏற்க மறுத்துவிட்டது. (தீர்ப்பு பாரா 39).

2) மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட இரண்டாவது வாதம், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25,26 ஆகியவைகளின்படி, இந்த அரசு ஆணை - தங்களது மத உரிமை, சுதந்திரம் இவைகளைப் பறிப்பதாக இருப்பதால் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அதற்கு அத்தீர்ப்பில், அவ்வாறு அரசியல் சட்ட அடிப்படை உரிமையான மதச் சுதந்திர உரிமை என்பது, தங்கு தடையற்ற, குறுக்கிடப்பட முடியாத உரிமை அல்ல.

அவைகளில் உள்ள முன்பகுதியில் தெளிவாக்கப்பட்டுள்ள "Subject to Public order, Morality and health" என்று உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

25(2))b என்ற உட்பிரிவில் உள்ள பகுதியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் அவ்வுரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று பல முந்தைய பிரபல வழக்குகளின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம். எதிர் மனுதாரர் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆகமங்களே தெரியாத அர்ச்சகர்கள் பலர் உள்ளதையும், பல ஆகமங்கள் தெளிவு இன்றி குழப்பமாக உள்ளது என்றும் உயர்நிலைக்குழுவின் பரிந்துரையையொட்டிய ஆணையையும் சுட்டிக் காட்டி, தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் வாதங்களும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. (பாரா 14).

வைணவ திவ்ய தேசங்கள் 108-இல், 106-க்குச் சென்று வந்துள்ள வ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்யதேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக உள்ளனர்; பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் (ஜஸ்டிஸ் திரு ஏகே. ராஜன் தலைமையிலான உயர் மட்டக் குழு அறிக்கை 16-01)

1972இல் வந்த அரசியல் சட்ட அய்ந்து நீதிபதிகள் அமர்வு, பாரம்பரிய அர்ச்சகர் நியமன முறை ஒழிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஜாதி, பிறப்பு அடிப்படையில்தான் அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என்பதையும் ஏற்கவில்லை.

இடையில் பல்வேறு விளக்கங்கள் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளவைகளை கருத்துகளாகவே (Obiter Dicta) கொண்டு இறுதி தீர்ப்பு என்கிற வகையில் (Ratio Decidendi) என்ற முறையில் Binding உள்ள முக்கிய Operative Portion ஆகக் கொள்ளப்பட வேண்டிய பகுதி 43-44வது பாராக்களில் கூறப்பட்டுள்ளவைகளாகும்.

பாரா 43-இல் - கூறப்பட்டுள்ள கருத்து:

ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன்படி வந்த சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும். இவ்வாறு பல தீர்ப்புகள் வழக்குகள் - எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதவை - தேவையானவையும்கூட"

(What each case of appointment of Archakas whenever and wherever the issue is raised, the necessity of seeking specific judicial verdicts in the future is inevitable and unavoidable)

பாரா 44 தான் திட்டவட்டமான ஒரு முடிவாகக் கூறப்படுகிறது. (ratio decidendi')

Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above.

இதன் சாரம், சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செய்யப்படல் வேண்டும் என்று கூறப்படுகிறது.

‘சேஷம்மாள் வழக்கின்படி, தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களை நியமனம் - ஜாதி அடிப்படை இல்லாது என்பதை ஏற்று மேலும் அதில் கூறியுள்ள ஒரே நிபந்தனை - பூசை செய்வதில், சடங்குகளில் தீவிர மாற்றம் ஏதும் செய்து விடக் கூடாது என்பதுதானே தவிர, வேறில்லை.

"In our opinion the apprehensions of the petitioners are unfounded. Rule 12 referred to above still holds the field and there is no good reason to think that the State Government wants to revolutionize temple worship by introducing methods of worship not current in the several temples."

அதை அனுசரித்து தான், தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை நியமனம் செய்து அனைத்து ஜாதியினரிடமிருந்தும் பார்ப்பனர் உட்பட 69 சதவிகிதப்படி நியமனம் செய்து அவர்களுக்கு வைணவ ஆகமம், சிவ ஆகமம் ஆகியவைகளில் தனித்தனியே வகுக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி, பயிற்சிகளை வைணவக் கோயில்களுக்குத் தனி, சிவன் கோயில்களுக்குத் தனிப் பயிற்சி என்று தீட்சையும் பெற்று, தயாராக உள்ள 200 பேர்களுக்கு மேல் உள்ளவர்களை, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறைக் கோயில்களில் அர்ச்சகர்களாக உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

இந்த அரசு ஆணை மீதிருந்த தடை (Stay) இத்தீர்ப்பு வெளியானதன் மூலம் நீக்கப்பட்டு விட்டது.

மேலும் உயர்நிலைக்குழு தந்த அரசு ஆணை எண் 1, - 2007 என்பது அமுலாக்கப்பட்டுள்ளது. அதன்மீது எந்த வழக்கும், தடையும் கிடையாது. அந்த ஆணைபற்றி இந்தத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (பாரா 14)

எனவே சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவைகளை நிறைவேற்றியதுதான் அரசு ஆணை 1, - 2007 என்பதாகும். எனவே இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படல் வேண்டும்.

English summary
Dravidar Kazhagam leader K Veeramani has urged that TN govt should appoint the trained Archakars as per SC verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X