நீட் தேர்வுக்கு எதிர்ப்பு... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நீட் தேர்வை விலக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், தமிழக மாணவர்கள் முத்துகிருஷ்ணன், சரவணனன் மர்ம மரணங்களுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் வருகிற 18ம் தேதி சென்னையில் ஆளுநர் மளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

நீட் தேர்வை விலக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குதல், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுதல், தேசிய (மாநில) உரிமைகளைப் பறிக்கும் முனைப்பைக் கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி நடத்தும் மாபெரும் முற்றுகை ஆர்ப்பாட்டம்!

Velmurugan announced to seige protest infront of Rajbhavan Tomorrow

தமிழகத்தை நாலாந்தரமாக்கும் முயற்சியே மத்திய அரசு திணிக்கும் நீட் நுழைவுத் தேர்வு. தமிழர்களை மருத்துவம் படிக்கவிடாமல் தடுக்கும் இந்த மனுதர்ம உத்தியை எத்தி உடைத்தெறிவோம்!

நீட் தேர்வு விலக்கும் மசோதாவிற்கு ஒப்புதல்

நீட் தேர்வை விலக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கு! தேசியப் (மாநில) பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு எடுத்துக் கொண்டு அநீதி இழைப்பதை அனுமதியோம்! தேசியப் (மாநில) பட்டியலில் இருந்து எடுத்துக் கொண்ட கல்வியை உடனடியாகக் கைமாற்று! கல்வி மட்டுமன்றி இதர துறைகளின் அதிகாரங்களையும் கைப்பற்றத் துடிப்பதைக் கைவிடு!

மத்திய அரசுக்கு கண்டனம்

அதிகாரத்தை தேசியங்களுக்கும் (மாநிலங்களுக்கும்) பரவலாக்குவதற்குப் பதிலாக மொத்த அதிகாரத்தையும் தன்னகத்தே குவிப்பதில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசின் சட்டவிரோதச் செயலை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் அதன் மாணவர் அணியும் வன்மையாகக் கண்டிக்கின்றன.

ஆளுநர் மாளிகை முற்றுகை

மத்திய அரசின் இந்த அடாத போக்கை எதிர்த்தும் நீட் தேர்வை விலக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு உடனடியாக அங்கீகாரம் வழங்கக் கோரியும் தமிழக மாணவர்கள் முத்துகிருஷ்ணன், சரவணனன் மர்ம மரணங்களுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் வரும் 18ந் தேதியன்று சென்னையில் ஆளுனர் மளிகையை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி முன்னெடுக்கிறது.

மனுதர்ம உத்திதான் நீட் தேர்வு!

நீட் (National Eligibility cum Entrance Test - NEET) என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் பொது நுழைவுத் தேர்வாகும். இது மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதாகும்.

நீட் தேர்வு கடினம்

ஆனால் சிபிஎஸ்இ அல்லாத தனித்த பாடத்திட்டங்களைக் பல மாநிலங்கள் கொண்டுள்ளன. எனவே இந்த தேசியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வது கடினமாகும். தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களுக்கு மிகமிக கடினமாகும். அதனால் அவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக் கனியாகவே மாறிவிடும்.

மருத்துவ சீட்டு கைவிட்டுப் போகும்

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3000 இடங்கள் உள்ளன. அவற்றில் 85 விழுக்காடு இடங்கள் (2500 இடங்கள்) தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு +2 மதிப்பெண்களின் அடிப்படையில் கிடைத்து வந்தன. நீட் தேர்வு வருமானால் அந்த இடங்களும் கைவிட்டுப் போய்விடும்.

மத்திய அரசு நாடகம்

ஆனால் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தவே இந்த நீட் தேர்வு என்கிறது மத்திய அரசு. இது வடிகட்டிய பொய். தகுதி, திறமை, விருப்பம், கனவு இருந்தாலும் வசதி இல்லாவிட்டால் அவரை மருத்துவப் படிப்பிற்குள்ளேயே நுழையவிடாமல் தடுக்கவே இந்த நீட் என்பதுதான் மெய்.

வஞ்சகத் திட்டம் - நீட் தேர்வு

நம் தமிழக கிராமப்புற, உழைக்கும் வர்க்க மாணவர்கள் தங்களது வறிய நிலையிலும்கூட +2 படிப்பில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறுகின்றனர். அவர்களை மருத்துவக் கல்லூரிக்குள் அனுமதிக்காமல் விரட்டியடிக்கும் வஞ்சகத் திட்டம்தான் இந்த நீட் தேர்வு.

சமூக நீதிக்கு எதிரானது

வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளோ பள்ளிக்குச் செல்லும் முன்பும் பள்ளியில் இருந்து வந்த பின்பும் நீட் பயிற்சி பெற முடியும். போட்டித் தேர்வில் வெற்றி பெற எந்திரங்களாகவே தயாரிக்கப்படுகிறார்கள். ஆக வசதி இருந்தால்தான் மருத்துவக் கல்வி, இல்லாவிட்டால் மாற்றுக் கல்வி என்ற நிலையை உருவாக்கும் நீட் சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானதே.

நீட் தேர்வு திணிப்பு

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, விளிம்புநிலை மக்களை விலக்கிவைக்கும் நீட்டை நாமும் விலக்கிவைப்போம்.ஆனால் மத்திய அரசு வலிந்து இந்த நீட் தேர்வைத் திணிக்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் ஒரே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டுவரத் துடிக்கிறது.

நீட் தேர்வு பயிற்சி மையங்கள்

தனியார் பள்ளிகள் அடித்துவரும் கட்டணக் கொள்ளை போதாதென்று நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலமும் அவை கொள்ளையடிக்க வகை செய்கிறது.நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டிலும்கூட வந்துவிட்டன. தற்போது மூன்று லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு உறுதி என்று ஆனால் இந்தக் கட்டணம் மேலும் பல மடங்காகும்.

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி

கார்ப்பரேட்டுகளை (பன்னாட்டு நிறுவனங்களை) கல்வித்துறையில் இறக்கிவிட்டு பணம் படைத்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு முனைகிறது. இத்தகைய செயல்பாடுகள் மூலம் தேசிய இன உணர்வு, மொழி உணர்வு இவற்றை அழித்து ஒரே இந்தி மொழி என மனுதர்ம கோட்பாட்டின்படியே நாட்டை வழிநடத்த விழைகிறது மத்திய அரசு.

மொழியை காக்க வேண்டும்

எனவே தமிழர்களாகிய நாம் நமது மொழி, இன, தேசிய பண்பாட்டு அடிப்படையிலான தன்மான வாழ்வுரிமையை நிலைநாட்டும் ஒரு வரலாற்றுக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

மத்திய அரசு வஞ்சகம்

ஏற்கனவே நதிநீர்த் தாவாக்கள், தடுப்பணை விவகாரங்கள், மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் உள்ளிட்டவைகளின் மூலம் தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொள்கிறது மத்திய அரசு.

போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்

அப்படி ஒரு நிலை இனி ஏற்படக்கூடாது. எனவே இந்த நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழக மாணவர்கள் முத்துகிருஷ்ணன், சரவணனன் மர்ம மரணங்களுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டுவதற்கு நமது கண்டனக் குரலை ஓங்கி ஒலிப்போம். நமது கோரிக்கைகளை முழக்கங்களாய் எழுப்பி மத்திய அரசின் செவிகளை அதிரச் செய்வோம்!! மாணவ செல்வங்களே வாரீர்! வாரீர்!!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu Vazhvurimai party chief Velmurugan announced to seige protest infront of Rajbhavan, demanding President should immediately pass NEET exemption Bill for TN students
Please Wait while comments are loading...