For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கான ரூ.318 கோடி நிதி என்னாச்சு?: ஸ்டாலின் கேள்வி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சட்ட மன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்ன ஆயிற்று, அந்த நிதி எந்தெந்த பணிகளுக்காக செலவிடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு மக்கள் மன்றத்தில் உரிய விளக்க மளிக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

What happened to smart card scheme fund?: MK Stalin

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தற்போது உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2017 முதல் 31.12.2017 வரை நீட்டிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் திகழும் ரேசன் கார்டுகள் வி‌ஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து "தாள் ஒட்டும் பணியில்" மட்டுமே அதிக கவனம் செலுத்தி, புதிய "ஸ்மார்ட் கார்டு" வழங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருவது வெட்கக் கேடானதாகவும், வேதனை தருவதாகவும் இருக்கிறது.

தமிழகத்தில் கழக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த பொது விநியோகத் திட்டத்தில் இந்த அரசுக்கு எவ்வித அக்கறையோ, ஆர்வமோ இல்லை என்பதையே இந்த வருடமும் "தாள் ஒட்டும் பணி துவங்கப்படும்" என்ற அதிமுக அரசின் அறிவிப்பில் எதிரொலிக்கிறது.

2011ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்படும் என "அறிவிப்பு" வெளியிட்டு, அதற்கு 700 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

2015-ல் தமிழக சட்ட மன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ் "ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக 318 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் "சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்" என்றும் அறிவித்தார். ஆனால் இன்று வரை ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறைவு செய்யப்பட்டு அந்த இரு மாவட்டங்களில் கூட இத்திட்டம் அமலுக்கு வரவில்லை என்பது தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆறாண்டு கால செயல்பாட்டின் லட்சணமாக இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 ரே‌ஷன் கார்டுகளில் மீண்டும் "உள்தாள் ஒட்டும் பணி" துவங்கப்படும் என்று இப்போது அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பது "ஸ்மார்ட் கார்டு அறிவிப்பு"ம் வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. இது மட்டுமல்ல, கடந்த ஆறு ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகள் இப்படித்தான் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்ற தி.மு.க.வின் குற்றச்சாட்டு மீண்டும் உறுதியாகியிருக்கிறது. அறிவிப்பும், ஆடம்பரமும் மட்டுமே இந்த அ.தி.மு.க. ஆட்சியின் அடையாளங்கள் என்பதற்கு கிஞ்சிற்றும் கவலையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு திட்ட அறிவிப்பு மேலும் ஒரு மோசமான உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சட்டமன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அறிவித்த 318 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. "உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்" என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டு, மறைந்த ஜெயலலிதா அம்மையார் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் திடீரென்று அந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து தங்களது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது போல், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்திலிருந்தும் அதிமுக அரசு பின் வாங்கி விட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆகவே சட்ட மன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்ன ஆயிற்று, அந்த நிதி எந்தெந்த பணிகளுக்காக செலவிடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு மக்கள் மன்றத்தில் உரிய விளக்க மளிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள இந்த அரசும் குடும்ப அட்டைகளில் "தாள் ஒட்டும் பணியில்" மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், முகவரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக இருக்கும் குடும்ப அட்டையில் இருக்கும் ஆறாண்டு கால குழப்பத்தை நீக்கி, ஏற்கனவே அறிவித்த படி ஸ்மார்ட் கார்டு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விலைவாசி உயர்வுகள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முக்கியம் என்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் முதல்-அமைச்சர் மிக முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK treasurer MK Stalin has questioned Tamil Nadu government about the fund allotted to smart card scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X