முதல்வரிடம் சரத்குமார் பேசியது இதுதானாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி, கமல் குறித்து பேசி அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். மாறாக சசிகலா குடும்பத்தை முழுமையாக வீழ்த்தும் வழிகளைப் பாருங்கள். அப்போதுதான் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வர முடியும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

டி.டி.வி.தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அம்மா அணியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 'ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் ஓரிரு நாட்களில் கை குலுக்கும் சூழல் உருவாகியுள்ளதாக' அரசியல் மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில், தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் முதல்வர். அதன் ஒருபகுதியாக, நேற்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு வருகை தந்தார் நடிகர் சரத்குமார்.

சரத்குமார் சந்திப்பு

சரத்குமார் சந்திப்பு

இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த சரத், ' மரியாதை நிமித்தமாகவே முதலமைச்சரை சந்தித்தேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அனைவரும் அரசியலுக்கு வர வேண்டுமென நினைக்கிறேன். நடிகர் சங்கத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பெண்கள் மீது தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்ற நடிகர் விஜயின் கருத்தை வரவேற்கிறேன்' என்றார். ஆனால், உண்மையில் நடப்பு அரசியல் நிலவரம் பற்றி இருவரும் விரிவாகவே விவாதித்துள்ளனர்.

சிறப்பான ஆட்சி.. எடப்பாடியாருக்கு புகழாரம்

சிறப்பான ஆட்சி.. எடப்பாடியாருக்கு புகழாரம்

இந்த சந்திப்பின்போது, ' நீங்கள் சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி அளித்ததைப் போல, பனை மரத்தில் இருந்து கள் இறக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்' என சரத் சொல்ல, 'கொஞ்சம் பொறுங்கள். இப்போதுதான் தென்னையின் நீரா பானத்துக்கான அனுமதியைப் பெற்றுத் தந்திருக்கிறேன். விரைவில் செய்து தருகிறேன்' என முதல்வர் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவை அடக்கி வைத்த சாராய லாபி

ஜெயலலிதாவை அடக்கி வைத்த சாராய லாபி

தொடர்ந்து பேசிய சரத், 'இதை நான் வலியுறுத்தக் காரணம். முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் இந்தக் கோரிக்கையை வைத்த போதெல்லாம், மிடாஸ் சாராய ஃபேக்டரிக்காக என்னுடைய கோரிக்கையை அவர் செயல்படுத்தவில்லை. இதற்கு முழுக் காரணம் சசிகலாதான். சாராய லாபியால், எங்கள் சமூகத்து மக்களின் கோரிக்கை நிறைவேறாமலேயே இருக்கிறது. நாங்கள் தொகுதிக்கு 10 சதவீதம் பேர் இருக்கிறோம். தென்னையைப் போல, பனைக்கும் அனுமதி கொடுத்தால் கொங்கு மண்டலம் முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்' என விவரித்ததை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டார் பழனிசாமி.

சசிகலா குடும்பம் போனால்தான்

சசிகலா குடும்பம் போனால்தான்

தொடர்ந்து பேசிய சரத், 'மக்கள் மத்தியில் சசிகலா குடும்பத்தின் மீதான நெகட்டிவ் இமேஜ் மறையவில்லை. அவர்களை வீழ்த்தினால்தான், நீங்கள் உயர முடியும்' எனக் குறிப்பிட, 'அவர்களை வீழ்த்தும் வேலையில் நான் இறங்கும்போது, உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை' என முதல்வர் சொன்னதாக சொல்கிறார்கள். இதற்கு பதில் கொடுத்த சரத், 'எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான். தவிர, ரஜினி, கமல் பற்றியெல்லாம் நீங்கள் எந்தக் கருத்தையும் கூற வேண்டாம். அரசியல்ரீதியான முக்கியத்துவம் கொடுக்கும் செயலாக மாறிவிடும். அதைத் தவிர்த்துவிடுங்கள்' எனக் கூற, 'இனி வரும் நாட்களில் அவர்களைப் பற்றிப் பேச மாட்டேன்' எனப் பதில் கொடுத்தார் முதல்வர் என்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources say about what was transpired between CM and Sarath Kumar when they met recently.
Please Wait while comments are loading...