ஏரிகளையும் கால்வாய்களையும் ஆட்டைய போட்டா சென்னை மூழ்கத்தானே செய்யும்... கமல் சொல்வதும் நிஜமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நீரில் மூழ்கத் தயாராகும் சென்னை-கமல் எச்சரிக்கை- வீடியோ

  சென்னை: பெருமழை வெள்ளத்தின் கோரப் பிடியில் சிக்கிய பின்னரும் சென்னை பெருநகரம் திருந்தவே இல்லை.. நீர்நிலைகளையும் நீர்நிலைகளில் இருந்து இயல்பாக வெளியேற உதவும் கால்வாய்களையும் கபளீகரம் செய்து கட்டுமானங்களை எழுப்பியவர்களால் சென்னை பெருநகரம் வெள்ளத்தால் மூழ்கத்தான் போகிறது என்கிற கமல்ஹாசனின் எச்சரிக்கை உண்மையானதுதான்.

  சென்னை நகரமே நீர் நிலைகளை கபளீகரம் செய்துதான் பல பிரமாண்ட கட்டுமானங்களை தன்னுள் வைத்திருக்கிறது. சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் இன்றும் லேக் ஏரியா உண்டு; ஆனால் ஏரியைத்தான் கோட்டங்களாக கட்டிடங்களாக மாற்றியிருக்கிறோம்.

  சென்னை புறநகரைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இன்று கனமழை கொட்டினாலேயே பெரும்பாக்கம், சிட்லபாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் மூழ்கிவிடும்.

  கூப்பாடு கூச்சல்

  கூப்பாடு கூச்சல்

  இங்கே ஏரிகளாக இருந்தவைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய ஏரிக்கும் கூட வரக் கூடிய மழைநீர் கால்வாய்களையும் மரணித்துப் போகச் செய்துவிட்டு மூழ்குதே.. மூழ்குதே என கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம்.

  எஞ்சியது 50 கூட இல்லை

  எஞ்சியது 50 கூட இல்லை

  சென்னையில் வில்லிவாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரி, கீழக்கட்டளை நாராய்ணபுரம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, பல்லாவரம் பெரிய ஏரி, பள்ளிக்கரணை சதுப்புநிலம் என அனைத்துமே சுயத்தை தொலைத்துவிட்டு கட்டிடங்களை தாங்கிக் கொண்டிருக்கின்றன. 1906-ம் ஆண்டு சென்னையில் இருந்த ஏரி, குளங்களின் எண்ணிக்கை 400க்கும் அதிகமானவை. இப்போது இதில் 50 கூட இல்லை என்பது எவ்வளவு கொடூரமானது தெரியுமா?

  கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

  கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

  சென்னைக்குள் இன்றும் ஓடுகின்ற ஆறுகள் கூவமும் அடையாறும்தான். ஆனால் இரண்டுமே கழிவுநீர் ஆறுகளாகிவிட்டன. அடையாற்றின் வழித்தடம் அத்தனையுமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அடையாற்றுக்கும் கூவத்துக்கும் வரும் மழைநீர் கால்வாய்கள் அத்தனையுமே காணமல் போய்விட்டது; ஆக்கிரமிப்புகளால் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. இவற்றை தூர்வாருதல் என்பதே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இப்படியான நிலையில் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால் சைதாப்பேட்டையும் தியாகராய நகரும் ஈக்காட்டு தாங்கலும் மூழ்காமல் என்னதான் செய்யும்? சட்டவிரோதமான ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு தரப்பும் ஆட்சியாளர்களும் முட்டுக் கொடுப்பதால்தான் இந்த பேரவலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சென்னை இருக்கிறது.

  பரிதாப கால்வாய்

  பரிதாப கால்வாய்

  அதேபோல் எண்ணூர் தொடங்கி முட்டுக்காடு வரையிலான பக்கிங்காம் கால்வாய். ஆங்கிலேயர் காலத்தில் நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்ற இந்த பக்கிங்கால்வாய் சென்னை பெருநகரின் கழிவு நீரை சுமந்து கொண்டு அலைமோதுகிறது. விரிந்து அகன்று கிடந்து பக்கிங்காம் கால்வாய் இப்போது பாதாள சாக்கடை திட்டத்துக்கான கால்வாய் போல இருக்கிறது எனில் எத்தனை வகையான ஆக்கிரமிப்புகள் அதன் மீது நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதை உணர முடியும். இந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றுவதும் எஞ்சிய நீர்நிலைகளை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி பாதுகாப்பதும்தான் இப்போதைய அரசின முன்னுள்ள முக்கியமான முதன்மையான பணி. இல்லையெனில் 2015- வெள்ளம் மட்டுமல்ல..அதைவிட மிக மோசமான பேரழிவாக சென்னை பெருநகரமே மூழ்குவதை யாரும் தடுக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.,

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The encroachment and lack of maintenence of our water bodies was the major reasons for Chennai floods.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற