For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல் வாயை மூடலாம்.. ஊர் வாயை மூட முடியுமா ஓ.பி.எஸ் அவர்களே?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ளத்தில் மக்கள் தவித்து வரும் நிலையிலும், நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெனக்கெட்டு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

அறிக்கைவிட்ட நேரத்திற்கு கூடுதலாக இரு உயிர்களை காப்பாற்றியிருக்கலாமே என்பது மக்கள் ஆதங்கமாக உள்ளது.

கமல்ஹாசன் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் மக்கள் தத்தளிக்கிறார்கள். நிர்வாகம் மொத்தமாக முடங்கியுள்ளது. வீணாக கார்பொரேட் நிகழ்ச்சிகளுக்கு ரூ.4000 கோடி செலவிடும் அரசுகள், மக்களுக்கு அந்த கோடிகளை பிரித்து கொடுத்தால், எல்லோரும் கோடீஸ்வரர்களாகியிருப்போம்.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

ஏழை, பணக்காரன் பிரிவினையை அரசியல்வாதிகள்தான் வளர்த்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு மக்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். நேற்று ஒன்இந்தியா-தமிழ் இணையதளம், தனது டிவிட்டர் மூலம் இதுகுறித்து மக்கள் கருத்தை கேட்டிருந்தது.

கமல் பக்கம் மக்கள்

கமல் பக்கம் மக்கள்

கமல்ஹாசன் கூறிய கருத்துபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேள்வி கேட்டு, நியாயமான கேள்வி, தேவையில்லாத கருத்து, டைமிங் தப்பு என்ற மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன. இதில் வாக்களித்தவர்களில் 72 சதவீதம் பேர் நியாயமான கேள்வி என்றுதான் கூறியுள்ளனர்.

ஓ.பி.எஸ்சுக்கு எதிராக..

ஓ.பி.எஸ்சுக்கு எதிராக..

தேவையில்லாத கருத்து என வாக்களித்தோர் 11 சதவீதம் மட்டுமே. மழை பாதிப்பு நீங்காத இந்த நேரத்தில் கருத்தை கூறியிருக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில், டைமிங் தப்பு என்ற ஆப்ஷனில் வாக்களித்தோர் 17 சதவீதத்தினர். ஆக, பெரும்பான்மையோர் கருத்து கமலுக்கு ஆதரவாகத்தான் உள்ளது.

ஓ.பி.எஸ். வசை

ஓ.பி.எஸ். வசை

ஆனால், மக்களின் கருத்துக்கு எதிர்மாறாக, நேற்று அமைச்சர் ஓ.பி.எஸ், ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், கமலை கடுமையாக வசைபாடியுள்ளார் ஓ.பி.எஸ். பிதற்றுகிறார், குழப்பவாதி என்பதுபோன்றெல்லாம், தரை லெவலுக்கு இறங்கி கமலை அட்டாக் செய்துள்ளார் ஓ.பி.எஸ்.

வார்த்தை தேடல்

வார்த்தை தேடல்

சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமலஹாசன் மாறிவிட்டார், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என்றெல்லாம், ஓ.பி.எஸ் அறிக்கையில் சரமாரியாக வசைமாரி பொழிந்துள்ளார்.

அறிக்கை தயாரிப்பு

அறிக்கை தயாரிப்பு

இதற்காக, ஒரு நீ...ண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கமல் மட்டுமா இப்படி கூறியுள்ளார்? சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் இதே கருத்தைதான் கூறிவருகிறார்கள். கமல் வாயை அடைக்க அறிக்கைவிட்ட ஓ.பி.எஸ்சால் ஊர்வாயை மூட முடியுமா? கமலுக்கு பதில் சொல்ல, செலவிட்ட இந்த கால நேரத்தை, ஆக்கப்பூர்வமான வகையில் மக்களை காக்க செலவிட்டிருக்கலாமே என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

மற்ற கேள்விக்கு பதில் இல்லை

மற்ற கேள்விக்கு பதில் இல்லை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இன்னும் பல மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டுள்ளனர். சாப்பாடு கிடைக்கவில்லை. இதுகுறித்து நிருபர்கள் கேட்டால் மைக்கை தட்டிவிடுகிறார்கள் அமைச்சர்கள். ஆனால், கமலின் கேள்வி நெருஞ்சி முள்ளாய் குத்தியதாலோ என்னவோ மக்களை பற்றி கூட கவலையின்றி அறிக்கைவிட்டு நேரம்போக்கி வருகிறார் ஓ.பி.எஸ் என்று மக்கள் கருதுகிறார்கள்.

மக்கள் vs ஓட்டு

மக்கள் vs ஓட்டு

மக்களை காப்பாற்றுவதைவிட, மக்கள் மத்தியில் ஆட்சி குறித்து அதிருப்தி வந்துவிட கூடாது, அதனால் ஓட்டை இழந்துவிட கூடாது என்பதுதான் அரசியல்வாதிகள் நோக்கமாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் விதத்தில்தான், நிவாரண பொருட்களில், முதல்வர் போட்டோ ஓட்டுவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது, கமலுக்கு எதிராக அறிக்கைகள் கன ஜோராக தயாரிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல்

மிரட்டல்

இவ்வளவு காட்டமாக, ஒரு தமிழ் திரை கலைஞனுக்கு எதிராக அறிக்கைவிட்டதன் மூலம், எதிர்த்து யாரும் கேள்விகேட்டால் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற மிரட்டலை மக்களுக்கு மறைமுகமாகவிடுத்துள்ளது அரசு. கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் இதே மாதிரியான ஒரு மிரட்டல்தான் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். முதலில், கோவன், இப்போது கமல்.. ஆனால், விஷயம் அரசை எதிர்த்து பேசுவதுதான்.

கோபம் கொப்பளிப்பு

கோபம் கொப்பளிப்பு

ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளாக பேசாத அமைச்சர்கள், அல்லது பேச அனுமதிக்கப்படாத நிலையில் இருந்தவர்கள் இப்போது வரிசை கட்டி வசை மாரி பொழிய ஆரம்பித்துள்ளனர். திடீரென, இப்படி பதிலடி கொடுக்க, ஐடியா கொடுத்துள்ளது, உயர் அதிகாரிகள் குழு ஒன்றுதான் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், வெள்ள நிவாரண விவகாரத்தில், மக்கள் மனதில் எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கும் கோபத்துக்கு, இதுபோன்ற நடவடிக்கைகள் தூபம்தான் போடும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

English summary
Why O.Panneerselvam spend time to answer Kamal haasan in this disaster situation, asks people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X