இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல்புகார்களை விசாரித்து, விரைவில் நடவடிக்கை எடுக்க உதவும் லோக் ஆயுக்தா சட்டத்தை விவாதங்களின்றி அவசரமாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  உச்சநீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாகவே லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு கொண்டுவருகிறது என கடந்த நான்கு ஆண்டுகளாக லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரவேண்டும் என கோரிவரும் அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பினர், தெரிவித்துள்ளனர்.

  அதேசமயம் முதலில் சட்டத்தை வரவேற்போம் பின்னர் அதில் மாற்றுக்கருத்துகள் இருந்தால் அதைசரிசெய்ய முயற்சிசெய்யவேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

  அவசரமாக சட்டம் கொண்டுவருவது ஏன்?

  லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவருவதில் தமிழக அரசின் போக்கை கண்டிக்கும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், ''தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடர் திங்களன்று (ஜூலை9) முடிவுக்கு வருகிறது. ஜூலை 10ம் தேதி அன்று லோக் ஆயுக்தா சட்டத்தை செயல்படுத்த எடுத்துள்ள முயற்சிகளை தெரிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."

  "தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள் கூறுகிறார்கள். லோக் ஆயுக்தா சட்டம் என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீதான ஊழல்வழக்குகளை விசாரிக்க கொண்டுவரப்படும் சட்டம். இந்த சட்டத்தை இவர்களே வடிவமைத்து நடைமுறைப்படுத்துவது எந்தவிதத்தில் பயன்தரும்?,'' என்று கேள்வி எழுப்புகிறார்.

  ''வெளிப்படைத்தன்மை இல்லை''

  மேலும், ''நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டத்திற்கான வரைவு வடிவத்தை முன்கூட்டியே பொதுத்தளத்தில் வெளியிடுகிறார்கள், பொதுமக்களின் கருத்துக்களை கேட்கிறார்கள். லோக் ஆயுக்தா சட்டம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்களை தீரவிசாரிக்க கொண்டுவரப்படும் சட்டம். இதனை பொதுத்தளத்தில் விவாதிக்காமல் கொண்டுவருவது நியாயமில்லை, இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அவசரமாக நிறைவேற்ற ஆளும்கட்சி எடுக்கும் முடிவுகள் சந்தேகங்களை கிளப்புகின்றன,'' என்கிறார் ஜெயராமன்.

  ''லோக்ஆயுக்தா அமைப்பதில் அதிமுக விருப்பம்''

  கர்நாடாகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்பட்டுவரும் லோக் ஆயுக்தா, அமைக்கப்பட்ட விதம் மற்றும் அந்த மாநிலங்களில் கொண்டுவந்த சட்டவடிவங்களை கொண்டு விரிவான அறிக்கையை அரசிடம் அளித்தபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறும் ஜெயராமன், ''கடந்த நான்கு ஆண்டுகளாக லோக் ஆயுக்தா கொண்டுவர எந்த ஏற்பாடும் செய்யாத தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவரவேண்டிய அவசியம் இல்லை என்றும், தற்போதுள்ள லஞ்சஒழிப்புதுறை அமைப்பே போதுமானது என்றும் வாதாடிய அரசை எப்படி நம்பமுடியும்? இவர்கள் கொண்டுவரும் சட்டம் மீண்டும் இவர்களை பாதுகாக்க மட்டுமே பயன்படும்,'' என்றும் குற்றம்சாட்டினர்.

  புகார்களை மறுக்கும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் லோக் ஆயுக்தா அமையவேண்டும் என்பது அதிமுகவின் விருப்பம் என்பதால்தான் 2016சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி பட்டியலில் லோக் ஆயுத்தா அமைக்கப்படும் என்று அறிவித்தாக கூறுகிறார்.

  லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?
  Getty Images
  லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?

  ''லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர மறுக்கிறோம் என்ற விமர்சனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சட்டம் வரவேண்டும் என்பது எங்களின் விருப்பம். தற்போது அதற்கான முயற்சிகளை செய்துவருகிறோம்,'' என்றார் அமைச்சர் சண்முகம்.

  லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட அதிமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக முயற்சிகள் எடுத்ததா என்றும், உச்சநீதிமன்றத்தில் லோக் ஆயுக்தாவுக்கு எதிரான முறையில் ஏன் வாதங்களை வைத்தது என்றும் கேட்டபோது, ''நாங்கள் முயற்சிகள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும். எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால் முயற்சி செய்யவில்லை என்று பொருளா? முழுமையான சட்டவடிவத்தை ஆலோசித்துதான் செய்யமுடியும்.''என அமைச்சர் சண்முகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

  ஜூலை மாதத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளில் லோக் ஆயுக்தா கொண்டுவரப்படவுள்ளதா என்றும், ஏன் கடைசி நாளில் இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று கேட்டபோது, ''எப்போது சட்டம் கொண்டுவந்தால் என்ன? கட்டாயமாக கொண்டுவருவோம் என்று நாங்கள் அறிவித்தோம். தற்போது முயற்சி செய்கிறோம். மேலும் தற்போது நடைபெறும் கூட்டத்தில் அந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று துணை முதல்வர் அறிவித்துவிட்டார். கூடுதல் தகவல்களை தற்போது சொல்லமுடியாது,'' என்று தெரிவித்தார்.

  ''முதலில் வரவேற்போம்''

  காலம் தாழ்த்தினாலும் லோக் ஆயுக்தா கொண்டுவர தமிழக அரசு முடிவுசெய்துள்ளது வரவேற்கத்தக்கது என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்.

  ''இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் இல்லை. தற்போது சட்டம் கொண்டுவருகிறார்கள் என்பதே ஒரு வெற்றிதான். பல சமூகஆர்வலர்கள் எழுப்பிய குரலுக்கு கிடைத்தவெற்றியாக இதை பார்க்கவேண்டும். சட்டம் கொண்டு வந்த பின்னர் அதில் பிரச்சனைகள் இருந்தால், களைய முயற்சி எடுக்கலாம். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராயலாம். ஆனால் இந்த முயற்சியை வரவேற்கவேண்டும்,'' என்கிறார் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்.

  லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?
  Getty Images
  லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?

  கர்நாடகாவில் செயல்பட்டுவரும் லோக் ஆயுக்தாவின் மூலமாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறை செல்ல நேர்ந்தது பற்றி பேசிய ஹரிபரந்தாமன், ''ஊழல் புகார்களை உடனடியாக விசாரிக்கவேண்டும், தீர்ப்பு விரைவில் அளிக்கப்படவேண்டும் என்பது லோக் ஆயுக்தா சட்டத்தின் சாராம்சம். கர்நாடகாவில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் முதல்வரை சிறைக்கு அனுப்பியது. இதேபோல தமிழகத்திலும் ஊழல் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த சட்டத்தை வரவேற்போம்,'' என நம்பிக்கையுடன் பேசுகிறார் ஹரிபரந்தமன்.

  குடிமக்களின் கடமை என்ன?

  சாதாரண மக்களின் புகார்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ''லோக் ஆயுக்தாவின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுபவர்களைப் பொருத்துதான் இந்த சட்டத்தின் பயன்பாடு அமையும். ஊழல் புகார்களில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற நபர்களை தலைமை பொறுப்பில் அமர்த்தினால், இந்த சட்டம் எந்த பயனும் தராது. அதேபோல இதனை நடைமுறைப்படுத்துவதில் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்,'' என்றார்.

  தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படும் விதத்தோடு லோக் ஆயுக்தாவை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று கூறிய அவர், ''தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மக்கள் பயன்பெற்றுள்ளதை நாம் அறிகிறோம். அதேபோல, தகவல் கேட்டு எந்த பலனும் அடையாதவர்களையும் பார்க்கிறோம். ஜனநாயக நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் அவசியம். அதை செயல்படும் முறையை நாம் கண்காணிப்பது முக்கியம். சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் செயல்படும்விதம் பற்றி தொடர்ந்து விவாதிக்கவேண்டும்,'' என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  லோக் ஆயுக்தா சட்டம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்களை தீரவிசாரிக்க கொண்டுவரப்படும் சட்டம். இதனை பொதுத்தளத்தில் விவாதிக்காமல் கொண்டுவருவது நியாயமில்லை.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற