கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்! சாக்கடை நகரமாகிடுமே! தஞ்சாவூர் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை
தஞ்சாவூர்: கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான யானை ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். மேலும், அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள், 11 கால்வாய்களில் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2018ம் ஆண்டு கும்பகோணம் மாநகராட்சி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

யானை ராஜேந்திரன்
ஆனால், ஐகோர்ட்டு உத்தரவு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஹைகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்..
இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த ஐகோர்ட்டு, கும்பகோணத்தில் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, 4 மாதங்கள் கெடு விதித்தது. ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்ற தவறினால் கும்பகோணம் மாநகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருந்தது.
கும்பகோணம் ஆக்கிரமிப்புகள்
இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை யானை ராஜேந்திரன் இன்று பார்வையிட்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யானை ராஜேந்திரன், " கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வாராததால், சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி பல்வேறு பயிர்கள் நாசமாகிவிட்டது.
தேப்பெருமாநல்லூர் வடிகால் வாய்காலில், வராக குளம் அருகிலேயே அடைக்கப்பட்டிருக்கிறது.. இப்படியான நிலைமை வரக்கூடாது என்பதற்காக தான் சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நீதி பேராண்மை உத்தரவில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதற்கு அரசுத்துறை அதிகாரிகள் தரப்பில், அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது என்று பதிலளித்தனர். ஆக்கிரமிப்பிலிருந்த 700 பாமர மக்களை அகற்றினார்களே தவிர, 250 ஆக்கிரமிப்புள்ள பழவத்தான் கட்டனை, தேப்பெருமாநல்லூர், உள்ளூர், ஒலைப் பட்டிணம் வாய்க்கால்களில் உள்ள கட்டுமானங்களை அகற்றவில்லை.
கோயில் நகரம் - சாக்கடை நகரம்
இந்த ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றாததற்கு காரணம், அவர்கள் பணமும் அரசியல் செல்வாக்கும் மிக்கவர்கள்தான். இந்நிலை நீடித்தால் கும்பகோணத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்... கோயில் நகரமான கும்பகோணம், சாக்கடை நகரமாக மாறிவிடும்.
கும்பகோணத்தில் உள்ள அதிகாரிகளும் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. அவர்களிடம் சொல்லியும் அலட்சியம் காட்டப்படுகிறது.. இனியும் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாததால் தனிக்குழு அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினால், அனுமதி கிடைக்கும்.
அதிகாரிகள் மீது எப்ஐஆர்
அப்படி குழு அமைத்தால் இப்போதுள்ள அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளில் கட்டுமான உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியவர்கள், உறுதுணையாக இருந்தவர்கள் உள்பட அனைவரது மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படும். அதனால் அதிகாரிகள் தங்களது மெத்தன போக்கை கைவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாருவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்திற்கு வரும், அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தனிக்குழு கட்டாயம் அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை வாங்கி விட்டால், சம்பந்தட்ட அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செயப்படும். மழை நீரினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்தால் நிச்சயம் கிடைக்க வாய்ப்புள்ளது" என்று யானை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications