தேனி நகராட்சி கூட்டத்தில் எம்எல்ஏ சபரி ஐங்கருடன் திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்.. என்ன நடந்தது?
தேனி: தேனி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தவெக எம்எல்ஏ பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் உடன் நகர் மன்ற தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுடைய கூட்டத்தில் பேசுவதற்கு எம்எல்ஏ-விற்கு உரிமை இல்லை எனக் கூறியதால் எம் எல் ஏ கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

தேனி - அல்லிநகரம் நகராட்சியில் இன்று மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன், நகர் மன்ற துணை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் சிறப்பு விருந்தினராக இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து விவாதம் நடைபெற்றது .
அப்போது கடந்த ஐந்தாண்டு காலத்தில் தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித அடிப்படை பணிகளும் மேற்கொள்ளவில்லை என எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் தெரிவித்து இருந்தார் . இதனால் நகர் மன்ற தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன் மற்றும் துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் அதிருப்தி அடைந்து, எம்எல்ஏ-வின் குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்து கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியுமா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் இது நகர் மன்றத்திற்கான கூட்டம்.. உங்களுக்கு இங்க பேச உரிமை இல்லை என நகர் மன்ற துணைத் தலைவர் செல்வம் தெரிவித்ததால் எம்எல்ஏ சபரி ஐங்கரனின் ஆதரவாளர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பெரியகுளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தைவிட்டு வெளியேறிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எம்எல்ஏ சபரி ஐங்கரன் கூறுகையில், சென்ற முறை நகர்மன்ற கூட்டத்தில் புகைப்படத்தை மாட்ட சொல்லி பிரச்சனை செய்து என்னை பேசவிடாமல் தடுத்தார்கள். இந்த முறை தமிழக வரலாற்றிலேயே நாங்கள் ஒவ்வொரு வார்டு வாரியாக வீடுகளுக்கு சென்று, என்ன பிரச்சனை என்று மனு வாங்கினோம். தண்ணீர் இல்லை, குப்பை நீக்கவில்லை, விளக்கு இல்லை என பல பிரச்சனைகளை கூறினார்கள். இதுபற்றி ஆய்வு கூட்டத்தில் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால் அவர்கள் எங்களை பேசவிடவில்லை.. நீங்கள் வெறும் பார்வையாளர் தான்.. நீங்கள் கேட்க முடியாது. சேர்மன் தான் இங்கே முடிவு செய்ய முடியும் என்று கூறி என்னை திமுக கவுன்சிலர்கள் பேசவிடவில்லை.. மிகவும் அராஜகமான முறையில் குரலை உயர்த்தி பேசினார்கள்" என்று கூறினார்.




Click it and Unblock the Notifications
