7 நாட்களுக்கு பானகரம் மட்டுமே உணவு.. ஆண்டிபட்டி அருகே சஷ்டி விரதத்தை தொடங்கிய 1000+ பக்தர்கள்!
தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் ஆலயத்தில் நெசவாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காப்பு கட்டி தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர். பானகரத்தை மட்டுமே 7 நாட்களுக்கு உணவாதாரமாகப் பருகும் கடும் விரதத்தை பக்தர்கள் தொடங்கியுள்ளனர்.
ஆறாவது தலைமுறையாக 171 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள், அடுத்த 7 நாட்கள் விரதத்தில் நாள்தோறும் பானகரத்தை மட்டுமே உணவாதாராகமாகவும், நீராதாரமாகவும் எடுத்து கொள்ளும் கடும் விரத்தை தொடங்கியுள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 200 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் ஆலயத்தில் இன்று 171 ஆவது ஆண்டாக கந்த சஷ்டி காப்பு கட்டும் விழா நடைபெற்றது.
இதற்காக காலை முதலே கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு மாலையில் கந்தநாதன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்று கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து கந்த நாதருக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் நெசவாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
அடுத்த 7 நாட்கள் விரதம் பிடிக்கும் இந்த விரத நாட்களில் பானகரத்தை மட்டுமே உணவு ஆதாரமாகவும், நீர் ஆதாரமாகவும் எடுத்து கொண்டு உடலை வருத்தி கடும் விரதமாக இருப்போம் என்று தெரிவித்துள்ள பக்தர்கள் 6 தலைமுறைகளாக இந்த கோவிலில் இவ்வாறு வழிபாடு செய்வதால் வேண்டும் வரங்கள் நிறைவேறுவதாக கூறுகின்றனர். வருகிற 15 ஆம் தேதி இக்கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 16 ஆம் தேதி கந்தநாதன் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
