வைகை அணை வறண்டது.. மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
தேனி: பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட 2°C அல்லது அதற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதுமே வானிலை மற்றும் தட்பவெப்பநிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றம் தமிழ்நாட்டையும் இந்த ஆண்டு மோசமாகப் பாதித்துள்ளது. டெல்டா பகுதியில் காவிரி வறண்டு கிடக்கிறது; தெற்கே வைகையும் வறண்டுள்ளது. வைகையில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்நிலை நீடித்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் மோசமாகச் சரிந்து வருகிறது. வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு, மேகமலை, முல்லைப்பெரியாறு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் வைகை அணைக்கு போதிய நீர்வரத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாகச் சரிந்து, கடந்த மே 29-ஆம் தேதி 20.51 அடியாகக் குறைந்து முற்றிலும் வறண்டது. இதனால் அணையிலிருந்து குடிநீருக்காகத் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து வைகை அணைக்கு நீர்வரத்து ஓரளவு வந்தது. இதன் மூலம், ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் தேனி, மதுரை குடிநீர்த் தேவைகளுக்காக 71 கன அடி தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணை நிரம்பவே இல்லை. கேரளாவிலும் போதிய மழை பெய்யவில்லை. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மிகக் குறைவாகவே இருந்த காரணத்தால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 400 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, மிகக் குறைவாகவே கிடைத்த தண்ணீரைக் கூடலூர், கம்பம், மதுரை குடிநீருக்காக வழங்கினார்கள். கடந்த சில மாதங்களாகவே முல்லைப்பெரியாற்றிலிருந்து வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை. இதனால் 42.45 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து, ஞாயிற்றுக்கிழமை 42.09 அடியாக இருந்தது. இதிலிருந்து ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் தேனி, மதுரை குடிநீருக்காகத் தினமும் விநாடிக்கு 82 கன அடி நீர் வழங்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்டம்:
முல்லைப்பெரியாறு அணை: முழு உயரம் - 152 அடி | நீர்மட்டம் - 117.35 அடி | நீர்வரத்து - விநாடிக்கு 131 கன அடி | நீர் வெளியேற்றம் - 400 கன அடி.
வைகை அணை: முழு உயரம் - 71 அடி | நீர்மட்டம் - 42.09 அடி | நீர்வரத்து - இல்லை | நீர் வெளியேற்றம் - 86 கன அடி.
மஞ்சளாறு அணை: முழு உயரம் - 57 அடி | நீர்மட்டம் - 26.10 அடி | நீர்வரத்து - இல்லை | நீர் வெளியேற்றம் - இல்லை.
சோத்துப்பாறை அணை: முழு உயரம் - 126.28 அடி | நீர்மட்டம் - 68.56 அடி | நீர்வரத்து - விநாடிக்கு 1 கன அடி | நீர் வெளியேற்றம் - 3 கன அடி.
சண்முகாநதி அணை: முழு உயரம் - 52.55 அடி | நீர்மட்டம் - 26.25 அடி | நீர்வரத்து - இல்லை | நீர் வெளியேற்றம் - இல்லை.
தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஐந்து அணைகளுக்கும் நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையே காணப்படுகிறது. வருசநாடு, மேகமலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்தால் மட்டுமே வைகை உயிர் பெறும். வைகை அணையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த ஆண்டு போதிய மழை பெய்யாமல் போனால், வரும் கோடையில் தென் மாவட்டங்கள் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், விவசாயமே செய்ய முடியாத அபாயகரமான சூழலும் உருவாகலாம்.


Click it and Unblock the Notifications
