"ஜெயலலிதா போல நல்லாட்சி தருவேன்!" சூளுரைத்த சசிகலா! டக்கென பதில் கொடுத்த ஓபிஎஸ்.. என்னாச்சு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் பசும்பொன் தேசிய கழகம் துணைத்தலைவர் ஆதி சுப்ரமணியன் இல்லத் திருமண விழாவில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
கிளாஸ்ரூமில் மது குடிக்கும் மாணவிகள்! திமுகவால் சமுதாய சீரழிவு! தேனியில் கொந்தளித்த ஓ.பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம், "தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை திமுக மக்களுக்கு அளித்தனர். ஓராண்டு ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்குப் பயனளிக்கும் வகையில் எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஓராண்டு ஆட்சிக் காலத்தில் மக்கள் வேதனையைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த ஓராண்டு உதாரணம்.

பொங்கல் பரிசு
அதிமுக பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது. திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களையும் பொங்கல் பரிசுத் தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது. பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரம் மதிப்பூதியம் இன்னும் வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.

ரவுடிகள் ராஜ்ஜியம்
அடித்தட்டு மக்களும் அனைவருக்கும் சமமாக வாழும் வகையில் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. கடந்த ஓராண்டு திமுக ஆட்சியின் வேதனையாகவே இருந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மின்வெட்டு
தமிழகத்தில் திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என்று தெரியாமல் தான் பொதுமக்கள் உள்ளனர். விவசாயிகளும் கூட மிகப்பெரிய வேதனையில் உள்ளனர். பயிருக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

வந்தால் பார்ப்போம்
சசிகலா மீண்டும் அதிமுகவில் இணையலாம் என்றும் அவரது தலைமையில் அதிமுக செயல்படக் கூடும் என்றும் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூட ஜெயலலிதா போல் நல்லாட்சியைத் தருவேன் என சசிகலா கூறி இருந்தார். இது குறித்து ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "வந்தால் பார்ப்போம்" என்று அவர் பதில் அளித்தார்.