ஓமிக்ரான்: கோவை, நெல்லையில் கண்காணிப்பு தீவிரம்.. கலெக்டர்கள் உத்தரவு
நெல்லை: ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை மற்றும் நெல்லை ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கோவையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்குமிடம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
நெல்லை ரெயில் நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரான் அச்சத்தில் உலகம்
தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உலகெங்கும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதை அடுத்து பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

சர்வதேச பயணிகள் கண்காணிப்பு
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கோவையில் தங்குமிடம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவதாக அம் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். மேலும் கோவைக்கு விமானத்தில் வந்து கண்காணிக்கப்பட வேண்டிய 16 பேரில் யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லவில்லை என்பதையும் ஆட்சியர் உறுதிப்படுத்தினார்.

கொரோனா தடுப்பூசி கோவை முன்னிலை
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு ஊசி முதல் தவணை 99% மக்களுக்கும், இரண்டாவது தவணை 86% மக்களுக்கும் போடப்பட்டு கோவை மாநிலம் தமிழகத்தில் முன்னிலை வகிக்கிறது என கூறிய ஆட்சியர் அம்ரித், தற்போது ஓமிக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் கோவிட் 19 பரிசோதனை நாள்தோறும் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.

ரயில் நிலையத்தில் பரிசோதனை
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த நெல்லை ஆட்சியர் விஷ்ணு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்படுவதாக கூறினார். மேலும், நெல்லை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் ஆக்சிஜன் , வெண்டிலேட்டர் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 72 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications