திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை..பெங்களூருவில் சிக்கிய கொள்ளையன்..தட்டி தூக்கிய போலீஸ்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை: ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பெங்களூருவில் பதுங்கியிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.32,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஏ.டி.எம். மையங்களிலும் போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் மீது கொள்ளையர்கள் கருப்பு நிற ஸ்பிரேவை அடித்து விட்டு உள்ளே சென்று உள்ளனர்.

இதே போல திருவண்ணாமலை நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்தில் உள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ 3,00,000 திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் போளூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து மொத்தம் 72 லட்ச 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கட்செய்த போது பணத்தில் தீ படாதவாறு புத்திசாலி தனமாக இயந்திரத்தை மட்டும் கட்செய்துள்ளனர். பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்ததுடன், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் எரிந்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் தனிப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தனர்.
வேலூர் வழியாக, ஆந்திர பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியதும் காவல்துறையினர் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏடிஎம் இயந்திரங்களை சீரமைக்கும் மெக்கானிக்குகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்பதால் ஏடிஎம்மில் அலாரம் அடிக்கவிடாமல் செய்து நூதன முறையில் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது.

மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள் கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஒவ்வொரு ஏ.டி.எம். மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனால் இதுகுறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறிய நிலையில் பெங்களூருவில் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஆரிஃப் என்பதாகும். அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்தும் கூட்டாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரிஃப்புக்கு அடைக்கலம் கொடுத்த தங்கும் விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications