தேர்தல் வெற்றிக்காக வேண்டுதலை நிறைவேற்றும் துர்கா ஸ்டாலின் : திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை: முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா, தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த மாதம் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த அவர் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார்.
Recommended Video
சட்டசபைத் தேர்தலில் தனது கணவன் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சென்று வேண்டுதல் வைத்தார். திருச்செந்தூர் முதல் திருப்பதி வரை சென்று சாமி தரிசனம் செய்தார்.
பெருமாள் கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். தை அமாவாசையில் நடைபெறும் திருநாங்கூர் ஆலயங்களில் நடைபெறும் 11 கருடசேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார் துர்கா ஸ்டாலின். அதே போல 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதுமாகும். நெல்லை மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு வேண்டுதல் வைத்தார் துர்கா ஸ்டாலின்.

திமுக வெற்றி
சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதல்வரின் இல்லத்திற்கு வந்து ஆலயத்தின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வேத பண்டிதர்கள் முதல்வர் வீட்டிற்கு வந்தனர்.

குடும்பத்துடன் தரிசனம்
இதனையடுத்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோவில்கள் மூடப்பட்டதால் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆடி அமாவாசை நாளில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்.

அண்ணாமலையார் தரிசனம்
ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாலை அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார் துர்கா ஸ்டாலின். தனது மகள் செந்தாமரை சபரீசன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நிறைவேற்றும் துர்கா ஸ்டாலின்
கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற தனது வேண்டுதல் நிறைவேறி விட்டதால் அனைத்து கோவில்களுக்கும் சென்று வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் துர்கா ஸ்டாலின். முதல்வரின் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்ததால், பொது மற்றும் கட்டண தரிசனப் பாதையில் சென்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தரிசனம் முடிந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றதும் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

செந்தாமரை கிரிவலம்
துர்கா ஸ்டாலினைப் போன்று, அவரது மகள் செந்தாமரையும் ஆன்மிகத்தில் பற்று கொண்டவர். கொரோனா ஊரடங்கு எதிரொலியாக, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது தந்தை மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என வேண்டிக்கொண்டு சிறப்பு அனுமதி பெற்று கடந்த சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டார்.

ஆவணியில் நன்றி சொன்ன துர்கா
மாசி பவுர்ணமி நாளில் எதிர்கட்சித்தலைவரின் மனைவியாக திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொண்டார் துர்கா ஸ்டாலின். ஆறு மாதம் கழித்து முதல்வரின் மனைவியாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு அண்ணாமலையாருக்கு நன்றி கூறி விட்டு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications