மகளுக்கு தீபாவளி சீர் செய்ய சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்! வீடு புகுந்து 160 சவரன் நகை கொள்ளை!
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் 2 கோடி மதிப்பிலான 160 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரொக்கம் திருட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கருப்பு கிளார் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் இவர் தனது மகளுக்கு தீபாவளி சீர் வைப்பதற்காக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெங்களூர் சென்று இருந்தார். இதையடுத்து இன்று பெங்களூரில் இருந்து கோவிந்தராஜ் கருப்பு கிளார் திரும்பினார்.
அப்போது தனது வீட்டை திறந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பதறி அடித்துக் கொண்டு பீரோ வைத்திருக்கும் அறைக்குச் சென்றார். பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 160 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக கோட்டூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் காவல் ஆய்வாளர் மோகன் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பவானி ஆகியோர் நேரடியாக திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த இரண்டு கோடி மதிப்பிலான நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
