குழந்தை இழுத்ததில் அறுந்த செயின்.. 2 லட்சம் மதிப்புள்ள நகை.. திருவாரூர் ஜாய்ஸ் மேரி நெகிழ்ச்சி செயல்
திருவாரூர்: திருவாரூரில் குழந்தை இழுத்ததில் தாயின் கழுத்திலிருந்து அறுந்து விழுந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை, மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் நேர்மையுடன் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பரபரப்பான மருத்துவமனை வரவேற்பறையில் கீழே கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்த அந்த பெண் ஊழியருக்கு போலீஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் விளமல் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர், தனது குழந்தையை தோளில் அணைத்தபடி வரவேற்பறை வழியாக சென்றுள்ளார்.

திருவாரூர் மருத்துவமனை
அப்போது அந்த குழந்தை, தாயின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளது. இதில் ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி அறுந்து கீழே விழுந்துள்ளது.
ஆனால், சங்கிலி அறுந்து விழுந்தது அந்தத் தாய்க்கு தெரியவில்லை. குழந்தையுடன் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த நேரத்தில் மருத்துவமனை ரிசப்ஷனில் பலரும் வந்து சென்றுகொண்டிருந்தனர். இதனால் ரிசப்ஷன் பிஸியாகவே இருந்துள்ளது..
தங்க செயின்
அந்த நேரதில், அதே மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் ஜாய்ஸ் மேரி, வீல் சேரில் நோயாளி ஒருவரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது தரையில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பார்த்த அவர், உடனடியாக அதை எடுத்துள்ளார். கொஞ்சமும் தாமதிக்காமல் மருத்துவமனை நிர்வாகத்திடம் அதை ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அந்த தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப்படைத்தது. காவல்துறையினர் விசாரணை நடத்தி, சங்கிலியை தவறவிட்ட பெண்ணைக் கண்டறிந்து அவரிடம் ஒப்படைத்தனர்.
நேர்மைக்கு கிடைத்த பாராட்டு!
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில், மருத்துவமனையின் பரபரப்பான ரிசப்ஷனில் கீழே கிடந்த சங்கிலியை ஜாய்ஸ் மேரி எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிறகு அந்த நகையை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
வறுமையில் வாடினாலும் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத ஜாய்ஸ் மேரியை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து காவல்துறையினர் அவரை மனதார பாராட்டியுள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் "வெரிகுட்" என்று கூறி கைகளை தட்டி பாராட்டியுள்ளார். அங்கிருந்த பெண் காவலர்களும் கைகளைத் தட்டி, மருத்துவமனை பெண் ஊழியர் ஜாய்ஸ் மேரிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சபாஷ் ஜாய்ஸ் மேரி
தங்கத்தின் மதிப்பை விட அதை நேர்மையுடன் உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே பெரியது என்பதை உணர்த்திய ஜாய்ஸ் மேரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இன்றைய அவசர உலகில் மனிதர்களுக்கு இடையே மனிதாபிமானமும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மையும் அரிதாகி வருவதாகத் தோன்றுகிறது. பணம்தான் வாழ்க்கை என்று பலரும் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், கிடைத்த பொருள் தனக்கு சொந்தமில்லாதபோது அதை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதநேயமிக்க பெண்தான் திருவாரூரை சேர்ந்த ஜாய்ஸ் மேரி...
கையில் கிடைத்த தங்கத்தைவிட, தனது மனசாட்சிக்கு அவர் கொடுத்த மதிப்புதான் இந்தச் சம்பவத்தில் உயர்ந்து நிற்கிறது.
அதுமட்டுமல்ல, நேர்மை என்பது வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டிய குணமல்ல. அது நல்ல மனம் கொண்ட ஒவ்வொரு மனிதரிடமும் இருக்க வேண்டிய பண்பு... ஜாய்ஸ் மேரியின் இந்தச் செயல், இன்னும் இந்த உலகில் நல்ல மனிதர்களும் மனிதநேயமும் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது...!!!


Click it and Unblock the Notifications
