திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம்..பக்தர்களே ஆன்லைன் முன்பதிவு ரத்து..தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: பிரம்மோற்சவ விழா 27ஆம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு தினமும் காலை 8 மணி முதல் இரவு 11:30 மணி வரை அன்னப் பிரசாத விநியோகம் நடைபெறும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் 20ஆம் தேதியன்று ஆழ்வார் திருமஞ்சனம் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது.
ஆந்திரமாநிலத்தில் புகழ்பெற்ற வைணவத் திருக்கோயிலான திருமலை திருப்பதி வெங்கடாசாபதி ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருமலையில் உள்ள அன்னமய பவனில், பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கலந்து கொண்டு பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

ஆழ்வார் திருமஞ்சனம்
அப்போது பேசிய அவர், இவ்விழாவின் தொடக்க நிகழ்வாக வரும் 20ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி வைபவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தல்கள் ஏழுமலையான தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பிரம்மோற்சவ கொடியேற்றம்
முதல் நாள் நிகழ்ச்சியான செப்டம்பர் 26ஆம் தேதியன்று மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து 27ஆம் தேதியன்று மாலை மீன லக்னத்தில் மாலை 5:45 மணியில் இருந்து 6:15 மணி வரை கொடியேற்ற வைபவம் நடைபெறும். அன்று இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பெரிய சேஷ வாகன திருவீதியுலா வைபவம் நடைபெறும்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கொடியேற்ற வைபவத்தில் கலந்து கொண்டு மாநில அரசின் சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து வழக்கம் போல், விழா நாட்களில் தினந்தோறும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை மற்றும், மாலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் வாகன சேவை நடைபெறும்.

கருடவாகனசேவை
அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையாகும். அன்றைய தினம் தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும். கருட வாகன சேவை வைபவம் மட்டும் மாலை 7 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரையிலும் நடைபெறும்.

இலவச தரிசனம் மட்டுமே
அக்டோபர் 5ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் சக்கரஸ்தான வைபவமும், அன்றிரவு 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்க வைபவம் நடைபெறும். மேலும், பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு தரிசிக்க வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இலவச தரிசனத்தை மட்டுமே அமல்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தரிசனங்கள் ரத்து
பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதியர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும பெற்றோர், என்.ஆர்.ஐ பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான சிறப்பு தரிசனம் ஆகியவற்றை ரத்து செய்துள்ளோம். அதே போல், சேவைகளுடன், ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்கள், பிற அறக்கட்டளைகளுக்கான காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் போன்றவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு வேண்டுகோள்
திருமலையில் அறைகள் குறைவாக இருப்பதால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திருப்பதியிலேயே அறைகளைப் பெற்று தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருமலையில், பக்தர்கள் 50 சதவீத அறைகளை மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரம் அன்னதானம்
வழக்கமான நாட்களில் தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப் பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரையிலும் அன்னப் பிரசாத விநியோகம் நடைபெறும். ஆனால், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 11:30 வரையிலும் அன்னப் பிரசாதம் வழங்கப்படும்.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்
பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் வாகன சேவையின் முன்பு, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றம் மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து, ஆன்மீக உணர்வைத் தூண்டும் வகையில் பிரம்மிக்க வைக்கும் கலை வடிவங்களை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல், திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபம், திருப்பதியில் உள்ள மஹதி கலையரங்கம், ராமச்சந்திர புஷ்கரணி, அன்னமாச்சாரியார் கலையரங்கம் ஆகிய இடங்களிலும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications