திமிங்கலம் திமுக கட்சிகளை விழுங்குது.. ஜோசப் விஜயை நம்பாதீங்க: அர்ஜுன் சம்பத்தால் திகைத்த திருப்பூர்
திருப்பூர்: திமுக எல்லா சாதனைகளையும் செய்து விட்டதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். இது மிகப்பெரிய பொய். சாராய விற்பனை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதன்மையாக உள்ளது என்று இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். மேலும் வழக்கம்போல் தவெக தலைவர் விஜய்யையும் தன்னுடைய பேட்டியின்போது விமர்சித்து பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் பயணம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சனங்களை ஆரம்பம் முதல் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, கொள்கை எதிரி என சொல்லப்படும் பாஜகவுக்கு எதிராக விஜய் இதுவரை வெளிப்படையாக விமர்சனம் செய்யவில்லை என்பதே முக்கியமான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

திமுக தரப்பில், "விஜய் பாஜகவின் C டீம்" என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,"விஜய் தனித்து இயங்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. நல்லது, கெட்டதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் பாஜகவோடு அவர் காட்டும் அணுகுமுறை அவருக்கே பயன் தராது" என்று கருத்து கூறியிருந்தார்..
பாஜகவை பார்த்து பயம்
"திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல; அது துடுக்கு மொழி. திமுகவை தாக்கி பேசும் அளவுக்கு, பாஜக மீது அவர் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. பாஜகவை பார்த்து ஏன் அவர் அச்சப்படுகிறார் என்று தெரியவில்லை" என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரியும் கடுமையாக விமர்சித்திருந்தார்..
இப்படி விஜயை பாஜகவுடன் தொடர்புபடுத்தி விமர்சனம் செய்யும் தலைவரிவர்கள் பாஜக ஆதரவாளர்களே என்ற குற்றச்சாட்டையும் சிலர் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், விஜய் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறியுள்ளார்.
விஜயின் அரசியல் நிலைப்பாடு தெளிவற்றதாக இருப்பதாக கூறி, பல்வேறு தரப்புகளில் இருந்து எழும் இந்த விமர்சனங்கள், தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.
ஜோசப் விஜய்
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத்பேசும்போது, "நடிகர் விஜய் திமுகவின் ஊதுகுழலாக உள்ளார். திமுகவும் கிறிஸ்துவ அமைப்புகளும் சேர்ந்து விஜய்க்கு எப்படி பேச வேண்டும் என பேச்சை எழுதி தருகிறார்கள். திமுக ஒரு தீய சக்தி என விஜய்க்கு எழுதிக் கொடுப்பதே திமுக தான்,
மக்கள் நீதி மையத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதேதான் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஏற்பட உள்ளது. ஆர்எஸ்எஸ் குறித்து பேசுவதற்கு விஜய்க்கு வயதோ, அரசியல் அனுபவமோ கிடையாது. தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 3 சதவீத ஓட்டு தான் பெறும்..
ஒவ்வொரு தேர்தலையும் திமுக நடிகரை நம்பி கட்சி ஆரம்பிக்க வைக்கிறது.. கடந்த தேர்தலில் நடிகர் கமலை கட்சி ஆரம்பிக்க வைத்தனர், மக்கள் நீதி மையம் ஆரம்பித்து திமுகவை எதிராக பேச வைத்து தேர்தலில் வாக்கை மாற்றினார்கள்.. இப்போது நடிகர் விஜய் திமுகவின் A டீம்மாக செயல்படுகிறார்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்..
திருப்பூர் பேட்டி
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மீண்டும் திமுகவையும், விஜய்யையும் விமர்சித்துள்ளார்..
அப்போது, "தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்றைய தின கூட்டத்தில் ஊழல் இருக்காது, எனது ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என பேசி உள்ளார். லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி என்பது வெற்றுப்பேச்சு . விஜய் தனது சினிமா டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு மூன்று, நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதன் பெயர் என்ன?
மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' பட விழாவில் மோசடி நடந்ததாக சொல்கிறார்கள்.. ஒரு டிக்கெட் 300 வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது.. விஜய்யின் கடந்த கால வரலாற்றில் வருமான வரித்துறையை ஏமாற்றிய சம்பவம் உள்ளது.. வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்தது போன்ற புகார்கள் உள்ளன.. அவர் கட்சியிலேயே மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகள் பணம் தந்துதான் பதவிகள் வாங்கப்படுகின்றன.. இப்படியெல்லாம் இருக்கும் விஜய் ஊழலற்ற ஆட்சியைத் தர முடியாது.. ஜோசப் விஜய்யை நம்பி ஏமாறாதீர்கள்.
திமிங்கலம் திமுக
திமுக எல்லா சாதனைகளையும் செய்து விட்டதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். இது மிகப்பெரிய பொய். சாராய விற்பனை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதன்மையாக உள்ளது. அவரின் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தொழில்கள் நம்பர் ஒன்னாக உள்ளது. நிம்மதியாக வீட்டில் உறங்குங்கள். மக்கள் உங்களை இந்த தேர்தலில் தோற்கடித்து வீட்டில் தூங்க வைப்பார்கள்.
கடந்த தேர்தலில் பெறப்பட்ட மனுக்களுக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. இந்த முறை உங்கள் கனவை நனவாக்குகிறோம் என்று சொல்கிறார்கள். மக்களை ஏமாற்றுவது மட்டும்தான் தி.மு.க.வின் வேலை.
இந்து மக்கள் கட்சி
பிப்ரவரி 15-ந்தேதி இந்து மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க அரசு அகற்றப்பட வேண்டும். அதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் தி.மு.க.வில் போட்டியிட்டு தி.மு.க.வாக மாறிவிட்டார். ம.தி.மு.க.வும் தி.மு.க.விடம் ஐக்கியம் ஆகிவிட்டது. தி.மு.க. என்ற திமிங்கலம் அனைத்து கட்சிகளையும் விழுங்கி வருகிறது" என்று விமர்சித்துள்ளார்..












Click it and Unblock the Notifications