தமிழ்நாட்டையே அதிர வைத்த பல்லடம் கொலையாளிகள்.. சரண் அடைந்த முக்கிய குற்றவாளி.. அதிரடி திருப்பம்
திருப்பூர்: பல்லடத்தில் ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் கொல்லப்பட்டதில் முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த திருப்பூர் மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 49 வயதாகும் மோகன்ராஜ் , 46 வயதாகும் அவரது சகோதரர் செந்தில்குமார், இவர்களின் தாயார் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோர், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி இரவு மது போதை கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து காவல்துறை குற்றவாளிகள் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடியது.
இந்த வழக்கில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் குண்டடம் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் போலீசிடம், கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை தொட்டம்பட்டி குடிநீர் தொட்டி மேல் மறைத்து வைத்திருப்பதாக கூறினார்., அதை எடுத்து தருவதாகவும் கூறி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது செல்லமுத்து ஏறினார்.
அவருடன் போலீசாரும் சென்றனர். அப்போது செல்லமுத்து, பின்னால் சென்ற போலீஸாரை தள்ளிவிட்டு, தொட்டியின் மேல் பகுதியில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதில் தவறி விழுந்த செல்லமுத்துவின் கால் முறிந்துவிட்டது.இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்லமுத்துவுக்கு மாவு கட்டுப்போடப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (எ) செல்வம் (27), தேனி மாவட்டம் முத்தாலபுரம் வைகல்பட்டியை சேர்ந்த விஷால் (20) உள்ளிட்டோர் தான் பல்லடத்தில் சம்பவதன்று தகராறு செய்து கொலையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்களை பிடிக்க போலீசார், தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பல்லடம் கொலை வழக்கு முக்கிய குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (எ) செல்வம் (27) மற்றும் கோனமுத்தையா ஆகியோர் திருப்பூர் வடக்கு போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications