ஓரிரு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கிறது திமுக.. செல்வப்பெருந்தகை சொன்ன வார்த்தை!
திருச்சி: கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்ளில் திமுக குழு அமைக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக குழு அமைத்த கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று கூறிய செல்வப்பெருந்தகை, பிப்ரவரி இறுதியில் காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து இன்னும் எந்தக் கட்சிகளும் வெளியேறாத சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு கூட அமைக்காமல் தாமதம் காத்து வருகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சி தரப்பில் டிசம்பர் மாதத்திலேயே கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

தாமதம் செய்யும் திமுக
கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினர் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். கிட்டத்தட்ட 2 மாதங்களாகிவிட்ட சூழலில், திமுக இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் சில நெருக்கடியை உருவாக்கியது. ஏனென்றால் மற்ற கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளனர்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஆனால் திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு, விருப்ப மனு விநியோகம், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளே தொடங்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் எம்பியான கார்த்தி சிதம்பரம், கூட்டணியில் குழப்பம் ஏற்படுவதற்கு திமுகவே காரணம். இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்காமல் திமுக தாமதம் செய்து வருகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
செல்வப்பெருந்தகை பேட்டி
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை தொடங்கி 6 மாதமாகிவிட்டது. ஒரு முறை அல்ல.. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இன்னும் 100 முறை வந்தாலும், தமிழக மக்கள் பாஜகவை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை மட்டுமே தீட்டி வருகிறது பாஜக.
தமிழ்நாடு புறக்கணிப்பு
இந்த பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஏராளமான நிதியை கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு கொடுப்பதில்லை. கல்வி நிதியில் ரூ.3,400 கோடியை கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்களை பாஜக வஞ்சிக்கிறது.
குழு அமைக்கும் திமுக
ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு நடந்து முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க உள்ளார்கள். அந்த குழு அமைத்தபின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும். அதேபோல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிப்ரவரி இறுதியில் வரவிருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications