பாஜக மட்டும் அதை செய்தால்.. ''நான் இந்தியாவின் பெயரை தமிழ்நாடுனு மாற்றுவேன்''.. சீமான் கலகல!
திருச்சி: பாஜக இந்தியாவின் பெயரை மாற்ற முடிவெடுத்தால் ''நான் இந்தியாவின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவேன்'' என்று சீமான் தெரிவித்தார்.

பாஜக 20 தொகுதியை வெல்லப் போவதுமில்லை.நாங்கள் விடப் போவதுமில்லை என்றும் சீமான் கூறினார்.

சீமான் பிரசாரம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் 234 தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சீமான் கூறியதாவது:- சுவிட்சர்லாந்து நாட்டில் மக்களுக்கு 6 லட்சம் ரூபாய் தருவதாக அந்த நாட்டு அரசு கூறியது.

எங்களுக்கு வேலை வேண்டும்
ஆனால் அந்நாட்டு மக்கள் 6 லட்சம் ரூபாய் தேவையில்லை எனக்கூறி அரசுக்கு எதிராக போராடினார்கள். ''அரசு 6 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வேலைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்களை கொண்டுவந்து வேலை வாங்குவர். அப்போது எங்களுடைய வேலை வாய்ப்பு பறிபோகும். எங்களுக்கு வேலைதான் வேண்டும் எங்களுடைய வாழ்விடம் பிரச்சினையாக போய்விடும்'' என்று அந்த நாட்டு மக்கள் குற்றம்சாட்டினார்கள்.

பாஜகவுக்கு தைரியம் இல்லை
வடநாட்டில் இருந்து சுமார் 1 கோடி பேர் தமிழ்நாட்டில் வந்துவிட்டார்கள். வெளி மாநில மக்களுக்கும் தமிழகத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று பாஜக தலைவர் சொல்கிறார். பாஜக முதலில் வெல்லட்டும். அதன்பிறகு திட்டத்தை பற்றி பேசட்டும். ஒரு உருப்படியான திட்டத்தை சொல்லியாவது ஓட்டுக் கேட்க பாஜகவுக்கு தைரியம் இல்லை. ஆனால் நாட்டின் பெயரை மாற்ற போவதாக கூறுகிறார்கள்.

வெறுமனே வேடிக்கை பார்க்க மாட்டேன்
இதனை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அப்போ நான் இந்தியாவின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவேன். 20 சீட்டை வாங்கி விட்டு பாஜக இந்த ஆட்டம் போடுகிறது. அவர்களுக்கு துணையாக 2 முதலமைச்சர். ஒரு நிதி அமைச்சர், ஒருவர் உள்துறை அமைச்சர் உள்ளனர். பாஜக அந்த 20 தொகுதியை வெல்லப் போவதுமில்லை.நாங்கள் விடப் போவதுமில்லை என்று சீமான் தெரிவித்தார்.