மேகதாது அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறும் மத்திய அரசுக்கு கேள்விகள்
திருச்சி: காவிரி நீர் தொடர்பான பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்ற மத்திய அரசு கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. மத்திய அரசின் வாதம் தவறு என்று கூறியுள்ள விவசாயிகள், எழுப்பிய கேள்விகளை பார்ப்போம்.
கர்நாடக மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்திருப்பது காவிரி டெல்டா மாவட்டங்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. மத்திய அரசு அப்பட்டமாக கர்நாடகாவிற்கு ஆதரவாக மாறியிருப்பதாக மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த பிரச்சனை எப்படி வெளியே தெரியவந்தது என்றால், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வியில் தெரியவந்தது. அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அன்புமணி கேள்வி
அவர் கூறுகையில், "'காவிரி நீர் தொடர்பான பிரச்சனை குறித்து கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா?.
மேலும் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது திட்டத்துக்காக கர்நாடக அரசு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற்றுள்ளதா?. அவ்வாறு பெற்றிருந்தால், அதன் விவரங்கள்?. மத்திய அரசின் முன் தற்போது இந்த மேகதாது திட்ட முன்மொழிவின் நிலை என்ன?' இவ்வாறு அன்புமணி கேள்வி எழுப்பி இருந்தார்.
தமிழ்நாட்டின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை
இந்த கேள்விகளுக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர ராஜ் பூஷண் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதில் தான் தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. அவர் கூறியதை பார்ப்போம்.. "காவிரி நீர் தொடர்பான பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
பாதிக்காத வகையில் அணை
அந்த தீர்ப்பில், காவிரி நீர் தீர்ப்பாயம் 2007-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும், எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் உரிமை, அதிகாரம் அல்லது ஆற்றலை குறைக்கவோ பாதிக்கவோ கூடாது. மேலும், இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், அந்த மாநில எல்லைக்குள் உள்ள நீரின் பயன்களை அனுபவிக்கும் அதன் உரிமையையும் அது பாதிக்கக்கூடாது." என்றும் வலியுறுத்தி உள்ளது.
திருப்பி அனுப்பி உள்ளோம்
கர்நாடகாவின் மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த திட்ட அறிக்கை, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இணங்கவும், தற்போது நடைமுறையில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியும் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டு திட்ட அதிகாரிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் கேள்விகள்
மத்திய அரசின் இந்த பதில் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருப்பதாக விவசாயிகள் ஆவேசமாக கூறினார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளை பார்ப்போம். 2018ம் ஆண்டு தீர்ப்பில், ஒப்புதல் பெற வேண்டும் என்ற சொல் நேரடியாக இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீரின் அளவைக் குறைக்கும் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது என்ற வலுவான தீர்ப்பினை தான் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.
காவரி நடுவர் மன்ற தீர்ப்பு என்ன
அதேபோல் 2007 காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அதே பிரிவு XVIII-ல், "ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் அணை கட்டலாம்; ஆனால் அது நடுவர் மன்றத் தீர்ப்புக்கு முரணாக இருக்கக்கூடாது "என்றும் தெளிவாக இருக்கிறது. காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்குத்தான் நீர் பங்கீட்டை மேலாண்மை செய்யும் முழு அதிகாரத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அதேபோல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகா ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் திறந்து விட வேண்டியது கட்டாயம் ஆகும். மேகதாதுவில் புதிய அணை கட்டினால், இயல்பாக வர வேண்டிய நீரின் அளவு குறைந்துவிடும்.
கீழ்மடை மாநிலங்கள் அனுமதி கட்டாயம்
பொதுவாக சர்வதேச அளவிலோ அல்லது மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுச் சட்டங்களின்படி கீழ்மடை மாநிலத்திற்கு வர வேண்டிய நீரின் அளவு பாதிக்கும் எனில், மேல்மடை மாநிலம் அணை கட்டும் முன் மத்திய நீர் ஆணையம், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கீழ்மடை மாநிலத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) ஒப்புதலைப் பெறுவது கட்டாய விதிமுறையாகும்.
மறைமுகமான உண்மை என்ன
அதுமட்டுமின்றி, 2019-ல் கர்நாடகா தாக்கல் செய்த மேகதாது விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியிருந்தது. அதில் நடுவர் மன்றத் தீர்ப்பின் விதிகளுக்கு உட்பட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலோடு திருத்தி அமைக்கப்பட்ட விரிவான அறிக்கையை செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது. அதாவது, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என்பதையே மறைமுகமாக உணர்த்தும் வகையில் மத்திய அரசு 2019ம் ஆண்டு நடந்து கொண்டது.
கர்நாடகா சும்மா இருக்குமா
அதேபோல் சில லாஜிக்கலான விஷயமும் இருக்கிறது. காவிரிக்கு நீர் வரும் கேரள மாநில பகுதியில் கேரளா மிகப்பெரிய அணை கட்டினால் கர்நாடகா அனுமதி தேவையில்லை என்று வேடிக்கை பார்க்குமா? அதேபோல் கிருஷ்ணா நதி நீரின் பிறப்பிடம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிரா மாநிலம், கிருஷ்ணாவின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டியோ அல்லது தடுப்பணைகள் பல கட்டுவதன் மூலம் தண்ணீரை வறண்ட பகுதிகளுக்கு ராட்சத மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்து சென்றால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் சும்மா இருக்குமா.. எனவே மத்திய அரசின் இந்த பதிலே தவறு என்று விவசாயிகள் கொதித்த படி கேள்வி எழுப்பினார்கள்.


Click it and Unblock the Notifications
