அண்ணாமலை உள்ளிட்ட 700 பேர் மீது திடீரென பாய்ந்த வழக்கு.. திருச்சியில் போலீஸ் நடவடிக்கை! என்ன காரணம்
திருச்சி: அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்ததாகக் கூறி திருச்சி தில்லை நகர போலீசார் மொத்தம் 5 பிரிவுகளில் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. வழக்கமாக இரண்டாம் கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை முதல்கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கே அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
பல முனை போட்டி: வழக்கமாகத் தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக இடையே தான் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை திமுக vs அதிமுக vs பாஜக vs நாம் தமிழர் எனப் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், இந்த முறை அவர்கள் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் தரப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன
அதில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தேனி மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. தேனியில் நேரடியாக டிடிவி தினகரன் போட்டியிடும் நிலையில், திருச்சியில் செந்தில்நாதன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். திருச்சியில் அமமுகவின் செந்தில்நாதனை ஆதரித்து அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும், அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்யக்கூடாது. ஆனால், அண்ணாமலை 10 மணியைத் தாண்டி பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகத் திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்தற்காக 5 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் சேர்த்து சுமார் 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
திருச்சி லோக்சபா தொகுதி: திருச்சி தொகுதியைப் பொறுத்தவரை அந்த தொகுதி இந்த முறை திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்குத் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கருப்பையா பன்னீர்செல்வம் என்பவருக்கு வாய்ப்பு தந்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் என்பவரும், நாம் தமிழர் சார்பில் ராஜேஷ் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசு போட்டியிட்டார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 6.21 லட்சம் வாக்குகளைப் பெற்ற திருநாவுக்கரசு 4.59 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.. அந்தத் தேர்தலில் இளங்கோவன் 1.61 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுகவில் இருந்து விலகிய சாருபாலா தொண்டைமான் அப்போது தனித்துப் போட்டியிட்ட நிலையில், அவரும் சுமார் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications