அமைச்சர் கீதா ஜீவன் தம்பிக்கு தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு! சீட் வாங்கி தந்த கனிமொழி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 20-வது வார்டில் போட்டியிடுகிறார் அமைச்சர் கீதாஜீவனின் தம்பி ஜெகன் பெரியசாமி.
மொத்தம் 60 வார்டுகள் உள்ள தூத்துக்குடியில் திமுக அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் ஜெகன் பெரியசாமி தான் தூத்துக்குடி மேயராக வர வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள்.
இதனிடையே தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலை களமிறக்க உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டிய நிலையில், ஜெகனுக்கு சீட் வாங்கி கொடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.

அமைச்சர் கீதாஜீவன்
சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் தம்பியும், கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்ட மறைந்த பெரியசாமியின் மகனுமான ஜெகனுக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் 20-வது வார்டில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது திமுக தலைமை. தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மற்ற வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை எல்லாம் தாமே தேர்வு செய்த அமைச்சர் கீதாஜீவன், தமது தம்பியை வேட்பாளராக நிறுத்தும் விவகாரத்தில் மட்டும் தலைமையின் ஒப்புதலை கோரியிருந்திருக்கிறார்.

கிரீன் சிக்னல்
தலைமையிடமிருந்து கிரீன் சிக்னல் வந்த பிறகே தம்பியை 20-வது வார்டு வேட்பாளராக நிறுத்தியுள்ளார் அமைச்சர் கீதாஜீவன். ஜெகன் பெரியசாமியை பொறுத்தவரை கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துகொள்ளக் கூடியவர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி சொல்கிற பணிகளை தட்டாமல், தாமதிக்காமல் நிறைவேற்றக்கூடியவர். இதேபோல் மேயர் தேர்தலை குறிவைத்து பல மாதங்களுக்கு முன்பே அதற்கான பணிகளையும் தொடங்கி செய்து வருபவர் ஜெகன் பெரியசாமி.

இளைஞரணி ஜோயல்
இந்நிலையில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயலை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் களமிறக்க உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இதனை கனிமொழி எம்.பி. விரும்பாத நிலையில், தூத்துக்குடியில் ஓங்கப்போவது யார் கை என உள்ளூர் உடன்பிறப்புகள் மத்தியில் விவாதம் எழுந்தது. திமுக வெற்றிபெறும் பட்சத்தில் தூத்துக்குடி மேயராகப் போவது ஜோயலா, ஜெகனா என பட்டிமன்றங்கள் நடக்கத் தொடங்கின.

மேயர் பதவி
இந்தச் சூழலில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக வேட்பாளர்கள் பட்டியலில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் பெயர் இடம்பெறவில்லை. அதேவேளையில் கனிமொழியின் சிபாரிசால் ஜெகன் பெரியசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 20-வது வார்டில் வெற்றிபெறுவதோடு மேயர் பதவியை பிடிப்பதற்கான பணிகளையும் ஜெகன் பெரியசாமி தரப்பு தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications