தொட்டு தொட்டு தெய்வானைக்கு முத்தம்.. சோகத்துடன் திருச்செந்தூர் யானை.. திருப்பரங்குன்றம் சம்பவம் வேற
தூத்துக்குடி: பாகனை கொன்றுவிட்டு அவரது முகத்தை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டு அழுத தெய்வானை, இப்போதும் வாடிய முகத்துடனேயே காணப்படுகிறது.. தெய்வானைக்கு இவ்வளவு கோபம் வருவதற்கு என்ன காரணம்? என்பது குறித்த சந்தேகங்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கியிருக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானையை புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவதற்கு கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது 26 வயதுடைய தெய்வானை என்ற பெண் யானை.. நேற்று முன்தினம் மாலை உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய 2 பேரையும் தாக்கி கொன்றது.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவக் குழுவினர் யானையை ஆய்வு செய்தனர்.. யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து, சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணையும் நடத்தினார்கள்.
சிசுபாலன்: இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன... தெய்வானை யானை வழக்கமாக கட்டி வைக்கப்படும் மண்டபத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தபோது, உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் இருவருமே அங்கு வந்து, யானையை சுற்றிச் சுற்றி வந்து செல்பி எடுத்திருக்கிறார்கள்.. யானையின் துதிக்கையில் முத்தமிட்டபடியும் செல்பி எடுத்திருக்கிறார்கள்.
இதில்தான் யானை மிரண்டு போய், சிசுபாலனை துதிக்கையால் தூக்கி சுவற்றில் வீசியுள்ளது. அவரை காப்பாற்ற ஓடி வந்த உதயகுமாரையும் துதிக்கையால் தள்ளிவிட்டுள்ளது. 2 பேருமே சுவற்றில் வேகமாக மோதியதில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டனர்.
சோகமான முகம்: உதயகுமாரை தாக்கிய பிறகே, அவரை அடையாளம் கண்டு, துதிக்கையால் தடவி கொடுத்து, அவரை எழுப்பிவிட முயன்றுள்ளது. தலைமை பாகன், யானையை சாந்தப்படுத்தினாலும், இயல்பு நிலைக்கு யானை வரவில்லை.. முகம் முழுவதும் சோகத்துடனேயே இருந்துள்ளது.. நீண்டநேரமாக சாப்பிடாமலும் இருந்துள்ளது.. நேற்றுதான் சிறிது சாப்பிட்டதாம்.
அதாவது, வழக்கமாக கொடுக்கப்படும் ஆரஞ்சு பழம், மாதுளை உள்ளிட்ட பழங்கள் தரப்பட்டுள்ளன.. பாகன் ராதாகிருஷ்ணன் ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து கொடுக்கவும், யானை அதனை மட்டும் சாப்பிட்டுள்ளது. யானையின் உடல் நலம் குறித்து பாகன் சுப்பிரமணியத்திடம் கோயில் தக்கார் அருள் முருகன் கேட்டறிந்து வருகிறார்..
பழைய உற்சாகம்: இப்போதைக்கு அமைதியாக காணப்படுகிறது தெய்வானை.. ஆனால், அந்த பழைய உற்சாகம் காணப்படவில்லை.. சோகம் மாறாமல் இருக்கிறதாம். எனினும், பக்தர்கள் யாரும் யானையின் அருகே செல்லாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இன்னும் 5 நாட்களுக்கு இப்படி கண்காணிப்பில் வைத்திருந்து, அதற்கு பிறகே புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்படும் என்கிறார்கள்.
இந்த யானை தெய்வானை குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.. 80 வருடத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லையாம்.. எல்லாருக்கும் இந்த தெய்வானை, செல்ல பிள்ளையாகவும், விளையாட்டு பிள்ளையாகவும் இருந்திருக்கிறது.
இதுதான் காரணமா: இப்போது முதல்முறையாக இப்படியொரு சம்பவம் நடந்துள்ள நிலையில், சில நிமிடங்களிலேயே தெய்வானை தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பியதோடு பாகனை தேடவும் துவங்கிவிட்டது.. எனவே, இது ஒரு விபத்து தான் என்றும் தெய்வானை மீது எந்த தவறும் கிடையாது என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், கடந்த வருடம்கூட தெய்வானை பற்றி சில தகவல்கள் வெளியாகியிருந்தன.. தெய்வானை தோல் நோயால் பாதிப்படைந்ததாகவும், துதிக்கை, கால்கள், முதுகு, வால் ஆகிய பகுதிகளில் மரு மற்றும் பூஞ்சைகள் சூழ்ந்துவிட்டதாகவும், இதனால் தெய்வானை கடந்த சில நாட்களாக சோர்வாகவே காணப்படுவதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
மருத்துவ பரிசோதனை: பிறகு மருத்துவ வல்லுநர் குழு தெய்வானையைப் பரிசோதனை செய்து சிகிச்சையும் தந்திருந்தனர்.. தோல் தொற்று ஏற்பட்ட இடங்களில் தொற்றுக்கூறுகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுவாக யானைகள் இயற்கை உணவுகளை மட்டுமே உண்டு வாழக்கூடியது.
ஆனால், இந்த யானைக்கு பக்தர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்களை நேரடியாக வழங்குகிறார்கள்.. இதனால்கூட தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என்றும், கெட்டுப் போன உணவுப் பொருள்களினால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் அப்போது காரணம் கூறியிருந்தனர். அத்துடன், தீவிர சிகிச்சைக்கு பிறகு, தெய்வானையின் தோல் தொற்று சரியாகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இந்த தெய்வானை இருந்தபோது, காளிதாஸ் என்பவரை இதே யானை தாக்கி அவரும் மரணமடைந்ததாகவும் சொல்கிறார்கள்.. அதிக மன அழுத்தத்தின் காரணமாக திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு அப்போது அனுப்பி வைக்கப்பட்டதாம்..
அங்கிருந்தபோதும் சரண் என்பவரை தூக்கி வீசியதாகவும், இதனால் யானையை மீண்டும் அஸ்ஸாமுக்கே கொடுத்துவிடுமாறு அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி வருகிறது.. எனினும், இந்த தகவல் மறுக்கப்படுகிறது.. அந்த தெய்வானை வேறு, அதற்கு வெறும் 19 வயதுதான் ஆகிறது.. அந்த யானை இப்போது, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
தேக்கடி : இப்படி பல்வேறு தகவல்கள் தெய்வானை பற்றி வலம் வந்தபடியே உள்ளது.. இந்த வருடம் தேக்கடி புத்துணர்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால், தெய்வானைக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது என்றும் வனத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.. தெய்வானையிடம் ஆசி வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளதை போலவே, நெல்லையிலும் கோயில் யானை காந்திமதியிடம் ஆசிபெற தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வனவிலங்கு ஆர்வலர் காளிதாஸ், "யானைகள் காட்டு விலங்கு.. அதை நமக்கு மத்தியில் வளர்த்து, நம்முடைய ஆசைகளை அதன் மீது திணிக்கிறோம்.. வளர்ப்பு யானைகளாக இருந்தால் அவை பூனை, நாய் போல் இல்லாமல் காட்டுத்தன்மையுடனே இருக்கும்.. தெய்வானைக்கு மதம் பிடித்திருக்க வாய்ப்பில்லை.. ஐந்தாறு யானைகளுக்காக அரசு புத்துணர்வு முகாம்கள் அமைக்கலாம்" ஆலோசனை தெரிவித்துள்ளார் காளிதாஸ்.
சம்பவம் நடந்து இன்று 3-வது நாள் வரை சரிவர அதாவது இயல்பான உணவை உட்கொள்ளாமல் பாகன் உதயகுமார் நினைவிலேயே இருந்து வருகிறது தெய்வானை.. மேலும் பாகன் இறந்த கிடந்த இடத்தையே உற்று பார்த்து கொண்டிருக்கிறதாம். 5 நாட்களுக்கு பிறகுதான் தான் யானையை வழக்கமான பணிக்கு பயன்படுத்தலாமா? அல்லது முகாமிற்கு அனுப்பலாமா? என முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இறந்துபோன உதயகுமார் உடலுக்கு கோவில் தக்கார் அருள்முருகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர் சம்பவம் நடந்த இடம் மற்றும் யானை கட்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications