வேலூர் டூ சென்னை.. ஓடும் ரயிலில் சரம் சரமாக விற்கப்படும் குட்கா! நடவடிக்கை எடுக்குமா ரயில்வே போலீஸ்?
வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் அத்தனை ரயில்களிலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான் பராக், கூலிப் உள்ளிட்டவை சரம் சரமாக விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2 ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், டாடா நகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பயணிகளை போல் ரயிலில் ஏறி தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா, பான்பராக், கூலிப் உள்ளிட்டவைகள் சரம் சரமாக ரயிலில் கூவி கூவி விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செல்லும் ரயில்களில் இந்த வியாபாரம் படுஜோராக தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட இந்த போதைப் பொருட்களை தாராளமாக, அதுவும் ஓடும் ரயிலில் எவ்வித அச்சமும் கட்டுபாடுமின்றி விற்பனை செய்யபடுகிறது. இதனை ரயில்வே காவல்துறை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இதனால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை இளைஞர்கள் பலரும் ரயிலிலேயே பயன்படுத்தி, பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவில்லை என்றால், பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்கும். இதனால் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
