கண்டுக்கொள்ளாத உதயநிதி.. சால்வை அணிவிக்க முடியாமல் தவித்துப்போன பொன்முடி
விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தோளில் சால்வை அணிய முடியாமல் அமைச்சர் பொன்முடி தவித்துப்போனார். இதனால் கையில் சால்வையை வைத்து கொண்டு பிரசார வாகனத்திலேயே தொண்டர்கள் முன்பு அவர் காத்திருந்த நிலையில் சில நிமிட போராட்டத்துக்கு பிறகு உதயநிதிக்கு அணிவித்தார்.
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. கடந்த 2019 திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

வரும் லோக்சபா தேர்தலிலும் மீண்டும் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக வழங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஆனால் இந்த முறை இருவருமே பானை சின்னத்தில் தான் போட்டியிட உள்ளனர். சட்டபோராட்டம், நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்னதாக நேற்று விழுப்புரம் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்துக்கு வந்திருந்த உதயநிதியை திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதன்பிறகு திறந்த வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இந்த சமயத்தில் பிரசார வாகனத்தில் நின்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவிக்க முயன்றார். கையில் மஞ்சள் நிற சால்வையை வைத்து கொண்டு பிரசார வாகனத்தின் மேல்புறம் பொன்முடி நின்றார். அவருக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நின்றார். உதயநிதியின் தோளில் சால்வையை பலமுறை அணிவிக்க பொன்முடி முயன்றார். ஆனால் உதயநிதி கண்டுக்கொள்ளவே இல்லை.
இதனால் பொன்முடி தர்மசங்கடத்துக்கு ஆளானார். அதன்பிறகு சுமார் 3 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஒருவழியாக அமைச்சர் உதயநிதி தோளில் அமைச்சர் பொன்முடி சால்வையை அணிவித்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications