செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அடுத்த திருப்பம்! வட மாநில தொழிலாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை
விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் 18 நாட்களாகியும் துப்பு துலங்காதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வழக்கில் அடுத்த திருப்பமாக, செஞ்சி அருகே கரும்பு தோட்டத்தில் பணியாற்றிய வட மாநில தொழிலாளர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஹேமலதா ( வயது 7). கடந்த 11 ஆம் தேதி மாலை தனது வீட்டில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு படுத்து உறங்கிய சிறுமி, அதிகாலையில் திடீரென மாயமானாள். சிறுமி மாயமாகி இன்றுடன் 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சிறுமிக்கு என்ன ஆனது? சிறுமியை கடத்தி சென்றது யார்? என துப்பு துலங்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

சிபிசிஐடி போலீசார் விசாரணையை கையில் எடுத்த பிறகும் சிறுமியின் நிலையை கண்டறியமுடியவில்லை. சிபிசிஐடி போலீசார் 8-வது நாளாக வழக்கை விசாரித்து வரும் நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் கதவை மர்ம நபர் 2 முறை தட்டியதாக மூதாட்டி ஒருவர் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் மூதாட்டியின் கதவை தட்டியது யார்? என்று விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீர் திருப்பமாக சிபிசிஐடி போலீசார் வட மாநில தொழிலாளர்கள் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆலமுண்டியில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள மேல் மலையனூர் என்ற கிராமத்தில் வட மாநில தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்கள்.
அந்த வடமாநில தொழிலாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கதவை தட்டியதாக கூறிய மூதாட்டியிடமும் டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். செஞ்சி சிறுமி மாயமான வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
