சிவகாசி: வீட்டில் பட்டாசு தயாரிக்கும் போது வெடி விபத்து - ஒருவர் பலி, பலர் படுகாயம்
சிவகாசி அருகே தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் பலர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் பலர் படுகாயமடைந்தனர். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ளது தாயில்பட்டி. இங்கு எஸ்பிஎம் தெருவில் ஒரு வீட்டில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. அதில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீர் என பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் சண்முகராஜ் என்பவர் உயிரிழந்தார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. கொரோனா லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஒருமாத காலமாக பட்டாசு ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 9 மாத காலத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அச்சங்குளத்தில் நிகழ்ந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த ஜூன் மாதத்தில் தாயில்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. வருவாய் துறை அதிகாரிகளும் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications