அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் எதிர்ப்பு
விருதுநகர்: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், "கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 1970-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதிகொண்டு வந்தார். ஆனால் அச்சட்டத்தின்படி 58 பேருக்கு தற்போது தான் பணியானை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது,
இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கடந்த 2007ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களில் ஆறு பாடசாலைகள் அமைக்கப்பட்டது.

2008ல் நடந்தது
அங்கு அனைத்து சமூகப் பிரிவினரையும் கொண்ட 240 மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் முறைப்படி அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் 240 பேர் ஒன்றரை வருட பயிற்சியை முடித்தார்கள் இவர்களில் 207 பேர் தேர்ச்சி பெற்றனர். ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 202 பேர் பணிக்காக காத்திருந்தனர். இதில் 2 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. 200 பேர் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர்.

ஸ்டாலின் உறுதி
இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமான ஸ்டாலின் உறுதி அளித்தார்.

திட்டம் நடைமுறை
அதன்படியே திமக ஆட்சிக்கு வந்த பின்னர் நடவடிக்கைகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

58 பேருக்கு நடைமுறை
அதன்பிறகு ஆகஸ்ட் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 பேருக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் வெவ்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

கண்டனம்
இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications