புதின் நல்லவரா! கெட்டவரா? வந்து விழுந்த கேள்வி.. கமல் ஸ்டைலில் டிரம்ப் சொன்ன பதில்! குழம்பிய அமெரிக்க மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் எப்போதும் ஆகாது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் நல்லவரா இல்லை கெட்டவரா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாகப் பதிலளிக்காத டிரம்ப், கமல் ஸ்டைலில் ஒரு வித்தியாசமான பதிலை அளித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரஷ்யா உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலால் அந்த இரு நாடுகளுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கூட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்தன.

ரஷ்யா உக்ரைன்
ஆனால், இந்த விவகாரத்தில் டிரம்ப்பின் நிலைப்பாடு வேறு விதமாகவே இருந்தது. போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையே அவரும் வலியுறுத்தினார். இருப்பினும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அவர் மறுத்துவிட்டார். மாறாக ரஷ்யா உக்ரைன் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முயன்றார். இதற்காக நேரடியாக அமெரிக்காவின் டீமையும் அனுப்பினார். இருப்பினும், அதிலும் கூட பெரிய பலன் கிடைக்கவில்லை.
இதற்கிடையே புதின் குறித்த கேள்விக்கு டிரம்ப் அளித்துள்ள பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது சமீபத்தில் எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகியிருந்தார். அப்போது அவர் டிரம்பை வெள்ளை மாளிகைக்கு நேரில் வந்து சந்தித்திருந்தார்.. அங்கு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
டிரம்ப்பிடம் வந்த கேள்வி
அப்போது செய்தியாளர் ஒருவர் புதின் நல்லவரா இல்லை கெட்டவரா எனக் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த டிரம்ப், கமல் ஸ்டைலில் ஒரு பதிலை அளித்தார். அதாவது உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தனக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கமல் ஸ்டைல் பதில்
இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்கப் போகிறோம்.. அப்போது திடீரென இரண்டு நகரங்கள் மீது ராக்கெட்டை வீசுகிறார்கள். அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இதுபோல எதிர்பாராத தாக்குதல்கள் பிடிக்காது. இது எனக்கு ஏமாற்றத்தைத் தருவதாகவே இருந்தது" என்றார்.
மேலும், புதின் மிகவும் பிடிவாதம் பிடிக்கிறாரா.. அவரை கையாள்வது உங்கள் நிர்வாகத்திற்குக் கடினமாக இருக்கிறதா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கும் கூட டிரம்ப் அளித்த பதில் வியப்பையே தந்தது. புதின் பெயரைக் குறிப்பிடாத டிரம்ப், "ஜெலென்ஸ்கியும் கூட பிடிவாதம் கொண்ட நபராகவே இருக்கிறார்" எனப் பதிலளித்தார்.
என்ன காரணம்!
அதாவது புதின் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்க விரும்பவில்லை என்பதே அவரது பதிலில் புரிந்து கொள்ள முடிகிறது. புதின் செயல்பாடுகளில் டிரம்பிற்கு கடும் அதிருப்தி இருந்தாலும் நேரடியாக அவரை விமர்சிப்பதைத் தவிர்த்திருக்கிறார். ஒருவேளை நேரடியாக விமர்சித்தால் போர் நிறுத்தம் மேலும் சிக்கலானதாக மாறலாம் என நினைத்தே புதினை விமர்சிப்பதை டிரம்ப் தவிர்த்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications