"எலான் மஸ்க்கை கண்டுகொள்ள வேண்டாம்.!" திடீரென டிரம்ப் நிர்வாகம் போட்ட ஆர்டர்.. வெடிக்கும் மோதல்?
வாஷிங்டன்: அமெரிக்க அரசில் எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் தடாலடியாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே அங்கு எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது போலத் தெரிகிறது. எலான் மஸ்க் அனுப்பிய மெயிலை கண்டுகொள்ள வேண்டாம் என டிரம்ப் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவில் பல அதிரடிகள் நடந்து வருகிறது. அதேநேரம் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் அமெரிக்க அரசியல் சுற்றி வருகிறது.

குறிப்பாக டிரம்ப் அரசு செலவுகளைக் குறைக்க டாஜ் என்ற புதிய துறையை உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்திருந்தார். ஒரு பக்கம் டிரம்ப் மற்றொரு பக்கம் எலான் மஸ்க் என வரிசையாகச் சர்ச்சை வெடித்தது.
எலான் மஸ்க் மெயில்
எலான் மஸ்க் கடந்த வாரம் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது அனைத்து பெடரல் அரசு ஊழியர்களுக்கும் ஒரு மெயில் போகுமாம். அதில் அவர்கள் வேலையில் தொடர அனுமதிக்க வேண்டும் என்பதை விளக்கி, கடந்த வாரம் செய்த 5 முக்கிய வேலைகளைக் குறிப்பிட்டுப் பதிலளிக்க வேண்டும் என்று மஸ்க் குறிப்பிட்டிருந்தார். மேலும், திங்கள்கிழமை இரவு 11:59க்குள் பதிலளிக்கவில்லை என்றால் அவர்கள் ராஜினாமா செய்ததாகக் கருதப்படுவார்கள் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார்.
கண்டுகொள்ள வேண்டாம்
இந்த மெயில் ஏதோ கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் போகவில்லை. மாறாக பெடரல் ஊழியர்கள், அமைச்சர்களின் ஆபீசில் பணிபுரிவோர் என அனைத்து தரப்பினருக்கும் சென்றிருந்தது. இதனால் பலரும் குழப்பமடைந்தனர். என்ன மாதிரி மெயில் அனுப்ப வேண்டும்.. எந்த விஷயங்களைக் குறிப்பிட வேண்டும் என எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாததால் பெடரல் ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். இருப்பினும், எலான் மஸ்க்கின் காலக்கெடு முடிவதற்கு முன்பே, டிரம்ப் நிர்வாகத்தின் மனிதவளத் துறையான பணியாளர் மேலாண்மை அலுவலகம் (OPM) இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளது.
அதேநேரம் பணியாளர் மேலாண்மை அலுவலகம் இது குறித்த விளக்கம் அளிக்கும் முன்பே எஃப்.பி.ஐ உள்ளிட்ட துறைகள் தனிப்பட்ட முறையில் தங்கள் ஊழியர்களிடம் இது குறித்து பதிலளிக்க தேவையில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பதிலளிக்க வேண்டாம்
அதாவது எலான் மஸ்க் தரப்பு அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பத் தேவையில்லை என்றும் அதற்குப் பதிலளிக்கவில்லை என்பதால் பணிநீக்க நடவடிக்கை எல்லாம் எடுக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெடரல் ஊழியர்களின் வாராந்திர வேலை அறிக்கையை டிரம்ப் நிர்வாகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது என்ற போதிலும் அதை எலான் மஸ்கின் மெயிலுக்கு பதில் அளிப்பதன் மூலம் தெரிவிக்கத் தேவையில்லை என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், எலான் மஸ்க்கிற்கு பதிலாக அனுப்பிய மெயில்களை ஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
வெடிக்கும் அதிருப்தி
டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து அங்கு விவாதம் அரங்கேறி வருகிறது. எலான் மஸ்க்கிற்கு டாஜ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரால் அனைத்து துறைகளிடம் கேள்வி கேட்க முடியும். ஆனால், துறை அமைச்சர்கள் இதை விரும்பவில்லை. எலான் மஸ்க் போன்ற ஒரு தொழிலதிபருக்கு இவ்வளவு அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்றும் தங்களிடமே பவர் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இதனால் எலான் மஸ்க் அதிகாரம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திலேயே அதிருப்தி வெடித்துள்ளதாகத் தெரிகிறது












Click it and Unblock the Notifications