நவீன அறிவியலால் கூட செய்ய முடியாத விஷயம்.. அசால்ட் செய்யும் சாதாரண எறும்பு! அசந்துபோன விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: ஒரு உயிரினம் இனப்பெருக்கம் செய்கிறது எனில், அது அந்த இனத்தின் சந்ததியைதான் உருவாக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வகை எறும்பு இரண்டு வெவ்வேறு இனங்களை சேர்ந்த எறும்புகளை இனப்பெருக்கம் செய்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இது ஒரு அரிய நிகழ்வு என்று விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.
அதாவது ஐபீரியன் ஹார்வெஸ்டர் எறும்புகளின் (Messor ibericus) ராணி எறும்புகள், தங்கள் இன சந்ததிகளை மட்டுமல்லாமல், முற்றிலும் வேறுபட்ட இனத்தின் சந்ததிகளையும் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதை படிக்கும்போது, ஏதோ அறிவியல் புனைகதையை போல தெரியும். ஆனால் இது முற்றிலுமான உண்மை என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். இணைப்பு ரீதியான இனப்பெருக்கம் என அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வு, விலங்கு இராச்சியத்தில் இதுவரை காணப்படாத ஒன்றாகும். இந்த ராணி எறும்புகள், Messor structor இனத்தைச் சேர்ந்த ஆண் எறும்புகளின் விந்தணுக்களை "கடன் வாங்கி", கலப்பினப் பணியாளர் எறும்புகளை உருவாக்குகின்றன. இவை அவற்றின் காலணிகளை நிர்வகிக்க உதவுகின்றன.
மற்றொரு இனத்தை நகலெடுப்பதன் மூலம் தங்கள் காலனியின் உயிர்வாழ்வை இந்த எறும்புகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்பு, இனப்பெருக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய நமது புரிதல்களை அதிகரிக்க உதவுகிறது. விலங்கு உலகில் இனப்பெருக்கம் ஆச்சரியங்கள் நிறைந்தது. ஒரு இனத்தின் பெண் உயிரினங்கள் முற்றிலும் மாறுபட்ட இனத்திலிருந்து சந்ததிகளை உருவாக்கும் திறன், மிகவும் ஆச்சரியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மெஸ்ஸர் பேரினத்தைச் சேர்ந்த ஐந்து இனங்களைச் சேர்ந்த 390 எறும்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில், பணியாளர் எறும்புகள், அவற்றின் ராணிகளிலிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டவை என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதாவது மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ சோதனை மூலம், ராணிகள் M. ibericus வகையைச் சேர்ந்தவை என்பதையும், பணியாளர் எறும்புகளின் தந்தைகள் M. structor வகையைச் சேர்ந்தவை என்பதையும் உறுதிப்படுத்தினர்.
இதன் பொருள், ராணி எறும்புகள் கலப்பின சந்ததிகளை உருவாக்குகின்றன. இது எறும்புகளில் இதற்கு முன் ஒருபோதும் காணப்படாத ஒன்று. இந்த எறும்புகள் செயல்படும் விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ராணி எறும்புகள் ஆண் சந்ததிகளை இரண்டு வடிவங்களில் உருவாக்க முடியும்.
1. இயல்பான M. ibericus வகையைச் சேர்ந்த இனப்பெருக்க பண்பு கொண்ட ஆண் எறும்புகள்
2. M. structor வகையைச் சேர்ந்த இனப்பெருக்க பண்பு இல்லாத, வேலைகளை மட்டுமே செய்யக்கூடிய ஆண் எறும்புகள்.
இந்த இரண்டு வகைகளிலும் ராணியின் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ உள்ளது. இது ராணிகள்தான் தாய்மார்கள் என்பதைக் காட்டுகிறது. ராணிகள் தங்கள் சொந்த மரபணுப் பொருட்களை முட்டையிலிருந்து நீக்கி, சேமிக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி ஆண் எறும்புகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதன் மூலம், ராணிகள் மற்றொரு இனத்தின் மரபணுக்களை "வீட்டு விலங்குகள்" போல் பயன்படுத்தி, பணியாளர்களாக செயல்படும் கலப்பினங்களை உருவாக்குகின்றன.
எறும்புகள் எப்போதும் கூட்டமாக வாழும். இந்த கூட்டத்துக்கு ராஜா எல்லாம் கிடையாது. ராணி மட்டும்தான். அந்த ராணிக்கு தேவையான உணவு, அதன் முட்டைகளை பாதுகாப்பது என பல விஷயங்களை பணியாளர்கள் எறும்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications