31 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு.. இதுவரை 7 பில்லியன் டாலர் இழப்பு.. இப்படியே போனால்..!
வாஷிங்டன்: 31 நாட்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் நிலையில், 7 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 62 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது.

அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதி ஆக உள்ள மத்திய சுகாதார மானியங்களை நீட்டிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மசோதாவைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது.
சுமார் 1.4 மில்லியன் கூட்டாட்சி ஊழியர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் அல்லது ஊதியமின்றி வேலை செய்கின்றனர். அக்டோபரில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் தற்காலிக பணி நீக்கத்தின் அடிப்படையில் வேலையில்லாதவர்களாகக் கணக்கிடப்பட்டால், அளவிடப்பட்ட வேலையின்மை விகிதம் அக்டோபரில் 0.4 சதவீத புள்ளிகள் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 31 நாட்களாக தீர்வு எட்டப்படாமல் பணி நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த பணி நிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் இதை மதிப்பிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 62.149 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த முடக்கம் இப்படியே தொடர்ந்தால், நவம்பர் 12 ஆம் தேதி வரை ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும், நவம்பர் 26 ஆம் தேதி வரை எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என அமெரிக்க காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முன்னர் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018 -19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் (CBO) என்பது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பட்ஜெட் மற்றும் பொருளாதாரம் தொடர்பான மதிப்பீடுகளை வழங்கும் கட்சி சார்பற்ற சுயாதீனமான கூட்டாட்சி நிறுவனம்.












Click it and Unblock the Notifications