டிரம்ப் கட்சி இப்படி மண்ணை கவ்வ என்ன காரணம்.. யாருமே எதிர்பார்க்காத 4 முக்கியமான விஷயங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த மிட் டேர்ம் தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட உண்மையில் டிரம்ப் அரசு இவ்வளவு பெரிய தோல்வியை அடைய என்ன காரணம் என்பது தொடர்பாக சில முக்கியமான டேட்டாக்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த மிட் டேர்ம தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை அடைந்துள்ளது. இந்த தேர்தல் டிரம்பிற்கு சவாலாக இருக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது. ஆனாலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தோல்வி அடையும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கும் என்பதை உண்மையில் யாரும் எதிர்பார்க்கவில்லை.

எதற்கு முக்கியத்துவம்?
இதற்கிடையே அமெரிக்காவில் மக்கள் எந்த பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள், அந்த விவகாரங்களில் எந்த கட்சிக்கு ஆதரவு கிடைத்தது என்பதை விளக்கும் வகையில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
அதில் அரசு நிர்வாகத்தில் ஊழல், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஆகியவையே முக்கிய பிரச்சனைகளாக இருந்துள்ளன. இந்த பிரச்சினைகளில் ஜனநாயக கட்சியினருக்கே அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதேபோல் ஈரான் போர் மற்றும் ஏஐ தொடர்பான விவகாரங்களிலும் ஜனநாயகக் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்துள்ளது.
ஊழல்
அரசு ஊழல் குறித்து மக்களிடையே இருக்கும் கவலைதான் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுமார் 55 சதவீத வாக்காளர்கள் இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் பலர் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். டிரம்ப் அரசின் செயல்பாடுகள், அவரது குடும்பத்தினரின் பிஸ்னஸ் தொடர்பாக அமெரிக்காவில் விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், ஊழல் விவகாரம் தேர்தலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
அடுத்ததாக விலைவாசி உயர்வும் முக்கிய பிரச்சனையாக இருந்துள்ளது. சுமார் 49 சதவீத வாக்காளர்கள் விலைவாசி உயர்வை முக்கிய பிரச்சினையாக பார்த்துள்ளனர். அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை, எரிபொருள் செலவு உள்ளிட்டவை செலவுகளை அதிகரித்துள்ள நிலையில், அதுவும் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கருதுகிறார்கள். ஈரான் போர், வரிகள் நிலைமையை மோசமாகிவிட்டதால் மக்கள் கருதியதால் அவர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.
ஈரான் போர்
ஈரான் போர் விவகாரத்துக்கு சுமார் 34 சதவீத வாக்காளர்கள் முக்கியத்துவம் அளித்துள்ளனர். இந்த விவகாரத்திலும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான வாக்காளர் போக்கு இருந்துள்ளது. அதேபோல் ஏஐ மற்றும் டேட்டா சென்டர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமார் 23 சதவீதம் பேர் முக்கியத்துவம் அளித்துள்ளனர். அதாவது சாதாரண மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்கும் காப்ரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்படி கிட்டத்தட்ட பெரும்பாலான விஷயங்களில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவான மனநிலையே உருவாகியுள்ளது.
ஒரே ஆதரவு
டிரம்ப் தரப்பை பொறுத்தவரை குடியேற்றம் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருக்கிறது. சுமார் 36 சதவீத மக்கள் இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். இதில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலை காணப்படுகிறது. அதாவது சட்டவிரோத குடியேற்றத்தால் அமெரிக்கா நாசமாகி வருவதாக சொல்லி வரும் டிரம்ப், குடியேற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இதற்கு மட்டுமே அங்கு மக்களிடையே ஓரளவுக்கு டிரம்ப் ஆதரவு இருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஊழல், விலைவாசி உயர்வு, ஈரான் போர், ஏஐ என பல்வேறு விவகாரங்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக மக்கள் இருந்துள்ளனர். அதேநேரம் . குடியேற்ற விவகாரத்தில் மட்டும் குடியரசு கட்சிக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இவை எல்லாம் சேர்த்தே டிரம்ப் படுதோல்வி அடைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
