டிரைவர் சீட்டில் டிரம்ப்! பக்கத்தில் எலான் மஸ்க்! ஆனாலும் ஆசையாக வாங்கிய டெஸ்லா காரை ஓட்டவில்லை ஏன்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்பிற்கும் எலான் மஸ்கிற்கும் நெருங்கிய நட்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே எலான் மஸ்கிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக டெஸ்லா காரை டிரம்ப் வாங்கினார். அழகான அந்த டெஸ்லா காரை வெள்ளை மாளிகையில் வைத்தே வாங்கினார். ஆனாலும், அந்த காரை அதிபர் டிரம்ப் ஓட்டவில்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இப்போது தொழிலதிபர் எலான் மஸ்கும் இருக்கிறார். அதிபர் தேர்தலுக்கு முன்பே டிரம்பிற்காக இறங்கி ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார் எலான் மஸ்க். இதன் காரணமாகவே அதிபரான பிறகு எலான் மஸ்கையும் தனது நிர்வாகத்தில் டிரம்ப் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக எலான் மஸ்கிற்கு டிரம்ப் முக்கியத்துவம் கொடுத்தே வருகிறார்.

டிரம்ப்:
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிதாக இப்போது ஒரு டெஸ்லா காரை வாங்கினார். சிவப்பு நிறத்தில் அட்டகாசமாக இருக்கும் இந்த டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியுள்ளார். வெள்ளை மாளிகையின் கார் பார்கிங்கில் புது டெஸ்லா காரை டிரம்பிற்கு எலான் மஸ்க் நேரடியாக வந்து வழங்கினார். டெஸ்லா கார் விற்பனை சமீப காலமாகவே அமெரிக்காவில் குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் எலான் மஸ்கிற்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் இந்த காரை வாங்கியுள்ளார்.
முதலில் காரை பார்த்த டிரம்ப் சென்று டிரைவில் சீட்டில் அமர்ந்தார். "ஆஹா, இது அழகாக இருக்கிறது.. ஆனால் நான் ஓட்டிய கார்களை போல இல்லை.. இது முழுக்க முழுக்க ஏதோ கம்ப்யூட்டர் போல இருக்கிறது" என்றார். தொடர்ந்து எலான் மஸ்க் முன்னாள் உள்ள பயணிகள் சீட்டில் உட்கார்ந்தார். தொடர்ந்து அவர் டெஸ்லா கார் சிறப்புகளை விவரித்தார்.
டெஸ்லா கார்
இந்த டெஸ்லா காரின் விலை 80,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.69 லட்சம்) என்றும் தான் எந்தவொரு சலுகையையும் பெறாமல் காரை வாங்கியதாகவும் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "இந்த காரை வாங்குவதாக சொல்லும் போது எலான் மஸ்க் எனக்கு டிஸ்வுண்ட் தருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், நான் தான் வேண்டாம் என மறுத்துவிட்டேன். முழு தொகை கொடுத்தே இந்த காரை வாங்கியுள்ளேன்.

டிரம்ப் சொன்ன காரணங்கள்
இந்த காரை நான் வாங்க 2 முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதலில் இது ஒரு மிகச் சிறந்த கார். நான் பார்த்ததிலேயே சிறந்த கார்களில் இதுவும் ஒன்று. மேலும், எலான் மஸ்க் தனது ஆற்றலையும் வாழ்க்கையையும் எலக்ட்ரிக் கார்களை செய்வதற்கு அர்ப்பணித்துள்ளார். இருப்பினும், அவர் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக நினைக்கிறேன்.
இதன் காரணமாகவே நான் ஒரு டெஸ்லா காரை வாங்க விரும்புவதாகச் சொன்னேன். எனக்குக் காட்ட எலான் மஸ்க் 4 கார்களை எடுத்து வந்தார். நான் உங்கள் முன்னிலையிலேயே ஒரு காரை வாங்கினேன். இந்த கார்கள் அழகாகவும் திறன் மிக்கதாகவும் உள்ளன.
எலான் மஸ்கிற்கு பாராட்டு
எலான் மஸ்க் அமெரிக்கா மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரு தேசபக்தர்.. அவர் மிகச் சிறந்த வேலையைச் செய்துள்ளார். அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவரது கொள்கை என்ன என்பதே எனக்குத் தெரியாது. ஆனால், பழகும் போது மிகவும் சிறந்த நபராகவே தெரிகிறார்" என்றார்.

சரியும் டெஸ்லா பங்குகள்
டிரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்கிற்கு பொறுப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதலே டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. அவரது சொத்து மதிப்பும் மிகப் பெரியளவில் சரிந்துள்ளது. டிரம்ப் அரசில் எலான் மஸ்க் அமெரிக்க அரசின் செலவைக் குறைக்கும் தொகையை நிர்வகித்து வருகிறார். அவர் செலவுகளை குறைக்கிறேன் என்று அரசுத் திட்டங்களை நிறுத்துவது தொடங்கிப் பல செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆவேசமடையும் பொதுமக்கள் எலான் மஸ்கிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
காரணம் என்ன
குறிப்பாக அமெரிக்கா முழுக்க இருக்கும் டெஸ்லா ஷோரூம் முன்பு திரளும் மக்கள், எலான் மஸ்கிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார் விற்பனை சரிய இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் டெஸ்லா பங்குகள் விலை 30% வரை சரிந்தது. குறிப்பாகத் திங்கள்கிழமை மட்டும் 15% சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் தான் எப்போதும் தனது ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் டெஸ்லா காரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வாங்கியுள்ளார். காரை சுற்றிப் பார்க்கும் போது டிரம்ப் முதலில் டிரைவர் சீட்டில் அமர்ந்தார். பக்கத்தில் உட்கார்ந்த எலான் மஸ்க், இந்த கார் சில நொடிகளில் 95 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடியது என்றும் இதை எப்படி ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றும் விவரித்தார்.
அதிர்ந்த சீக்ரெட் சர்வீஸ்
அதேநேரம் டிரம்ப் டிரைவர் சீட்டில் அமர்ந்தது அதிபரை பாதுகாக்கும் சீக்ரெட் சர்வீஸுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தியிருக்கும் என்றும் எலான் மஸ்க் நக்கல் செய்தார். அமெரிக்க அதிபர் பதவியில் இருப்பதால் டிரம்ப்பிற்கு கார் ஓட்ட அனுமதி இல்லை.. இதனால் அவர் டெஸ்லா காரை டெஸ்ட் டிரைவும் செய்யவில்லை.. வெள்ளை மாளிகை ஊழியர்கள் காரை டெஸ்ட் டிரைவ் செய்வார்கள் என டிரம்ப் கூறினார்.

வண்டி ஓட்டக்கூடாது
அது ஏன் டிரம்ப் கார் ஓட்டவில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. என்ன தான் உலகின் பவர்புல் நாடான அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் இருந்தாலும் அவராலும் சில விஷயங்கள் பண்ண முடியாது. அதிபரை பாதுகாக்கும் சீக்ரெட் சர்வீஸ் கட்டுப்பாடுகளை விதிக்கும். அதில் முதலாவது தான் கார்களை ஓட்ட இருக்கும் தடை.. அதிபர் பதவியில் இருப்போர் கார் ஓட்டவே கூடாது. பாதுகாப்பு காரணங்களால் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
1960களில் அப்போது அதிபர்களாக இருந்தவர்களைக் குறிவைத்து சில கொலை முயற்சிகள் நடந்தன. இதையடுத்து அமெரிக்க அதிபரைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை வழங்க வாரன் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே அமெரிக்க அதிபர்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டது. கடைசியாக 1963- 1969 வரை அதிபர் பதவியில் இருந்த லிண்டன் ஜான்சன் என்பவர் தான் சொந்தமாகக் காரை ஓட்டியிருந்தார். அதன் பிறகு எந்தவொரு அதிபருக்கும் கார் ஓட்ட அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே டிரம்ப் டெஸ்லா காரை வாங்கிய போதும் அதை ஓட்டவில்லை.












Click it and Unblock the Notifications