புதுச்சேரி ஸ்ரீ அன்னை தரும் நேர்மறைவாழ்வு.. மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.. மதர் பிறந்தநாள்
சென்னை: இன்று ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளாகும்.. விதவிதமான வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் அஞ்சலி செய்து கொண்டாடி, "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" என்று வேண்டிக் கொண்டாலே போதும், அனைத்து வளமும் நமக்கு கிட்டும்.
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் சுமார் 100 வருடத்துக்கு முந்தைய வரலாற்றை கொண்டது. அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அரவிந்தரால் நிறுவப்பட்டது. அவரைப் போலவே அவரது கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் அவருடன் இணைந்து அந்த ஆசிரமத்தில் ஒன்றாக பயணித்து வந்தனர்..

அப்போதுதான், அரவிந்தரின் தீவிர சீடராக இருந்த மீரா அல்பஸ்சா என்பவர் ஏப்ரல் 1920ல் அரவிந்தரின் வழிகாட்டுதலை வேண்டி புதுச்சேரிக்கு வந்தார். அன்றுமுதல் இந்த ஆசிரமத்தின் முக்கிய அங்கமாகவும் மாறினார். இவர் இந்த ஆசிரமத்துக்கு வந்தபிறகு, ஏராளமானோர் ஆசிரமத்தை நோக்கி செல்ல துவங்கினர்.. கடந்த 1926ல், இது மிகப்பெரிய ஆசிரமமாக மாற்றப்பட்டது.
கண்களை காக்கும் அன்னை
அப்போது முதலே அன்னை என்றும் மதர் என்றும் பாண்டிச்சேரி மதர் என்றும், 'நேத்ரா தேவி' என்றும் பலபெயர்களால் அழைக்கப்படுகிறார்.. நேத்ரம் என்றால் கண் என்று அர்த்தம்.. அன்னையை கண்களுக்கான கடவுளாகவே பக்தர்கள் போற்ற துவங்கிவிட்டார்கள். அதனால்தான், அன்னையின் கண்கள் மட்டும் உள்ள போட்டோக்களை வைத்து வீடுகளில் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
இப்படி அன்னையின் கண்களை கொண்ட படத்தை வைத்து பூஜித்து வந்தால், அந்த குடும்பத்தில் யாருக்குமே கண் கோளாறுகள் நீங்குவதுடன், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நெருங்காது என்பது நம்பிக்கையாகும்..
மலர்களால் வேண்டுதல்
கண்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர வேண்டும் என்றும் ஸ்ரீஅன்னையை வேண்டி கொள்வார்கள்.. இதற்காக அன்னை பரிந்துரைத்த மலர்களை, அன்னைக்கே சமர்ப்பித்து பிரார்த்தித்து கொள்வார்கள்.
ஏனென்றால், புதுச்சேரி அன்னை, பூக்களின் மீது அபாரமான அன்பு கொண்டிருந்தார். பூக்களுக்கும் அன்னைக்கும் இடையே பல தொடர்புகள் உண்டு. அன்னை, செடியுடன், மரங்களுடன், பூக்களுடன் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, முன்னேற்றமான வாழ்க்கை வேண்டுமானால் ஒற்றை ரோஜாவை அன்னைக்கு சூட்டி பிரார்த்திக்கலாம்.. அனைவரிடமும் அன்பும், பாசமும் நீடிக்க வேண்டுமானால், செம்பருத்திப் பூவை அன்னைக்குச் சூட்டி வேண்டிக்கொள்ளலாம்... தன்னை சுற்றிலும் உள்ள பிரச்சனைகள், கஷ்டங்கள், துன்பங்களும் நீங்க வேண்டுமானால், டிசம்பர் பூக்களை வைத்து வழிபடலாம்..
பூக்களும், பலன்களும்
மனதில் துணிவும் உறுதியும் வேண்டுமானால், எருக்கம்பூ சமர்ப்பிக்கலாம். செல்வமும் சகல ஐஸ்வரியங்களும் பெற வேண்டுமெனில் நாகலிங்கப்பூவை சமர்த்தித்து அன்னையிடம் வேண்டிக்கொள்ளலாம். தூய சிந்தனைகளுக்கு, நல்ல எண்ணங்களுக்கு மல்லிகைப்பூக்களை வைத்து வழிபடலாம்.. நினைத்த காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் மஞ்சள் நிறம் கொண்ட பூக்களை சமர்ப்பிக்கலாம்..
பக்தி உணர்வு மிகுந்திட துளசி, பக்தி மனப்பான்மைக்கு வில்வ இலை, புதிய திறமைகளைப் பெற சம்பங்கிப்பூ, என்றும் அழியாத்தன்மையை அளித்திடும் வாடாமல்லிப்பூ, இனிமைக்கு வேப்பம்பூ , பூரண பாதுகாப்பிற்கு குரோட்டன்ஸ் மலர் , செய்யும் காரியங்களில் வெற்றி பெற வெள்ளை செம்பருத்தி, புதிய சிருஷ்டிக்கு லில்லிப்பூ, விஸ்வாசத்திற்கு ரங்கோன் மல்லி, பூரண ஆரோக்கியத்திற்கு சாமந்திப் பூ என இப்படி 60-க்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றைக் கொண்டு வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அன்னையே விளக்கியிருக்கிறார்.
இன்று ஸ்ரீஅன்னையின் பிறந்தநாள்
மிக உயர்வான நேர்மறை சிந்தனைகளை ஒவ்வொருக்குள்ளும் விதைத்து மனித குலத்தை உயர்த்தவே அவதாரம் எடுத்தவர் அன்னை.. ஸ்ரீ அன்னையை வழிபட அர்ச்சனையோ மந்திரங்களோ தேவையில்லை. மேற்கண்ட மலர்களை கொண்டு வழிபாடு செய்தாலே போதும், அனைத்து நன்மையும் கிட்டும்.
இன்று 21ம் தேதி ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளாகும்.. விதவிதமான வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் அஞ்சலி செய்து கொண்டாடி, 'மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே' என்று வேண்டி ஸ்ரீ அன்னையின் அருளாசியை பெறுவோம்.












Click it and Unblock the Notifications