For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி..ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு.. மோகினியாக அருள்பாலித்த நம்பெருமாள்

Google Oneindia Tamil News

திருச்சி: வைகுண்ட எகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. பகல்பத்து விழாவின் பத்தாம் நாளான இன்றைய தினம். நம்பெருமாள் நாச்சியார் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது.

Srirangam vaikunta ekadasi Sorgavasal Tiruapu tomorrow Namperumal blessed as Mohini

கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், கடந்த சில ஆண்டுகளாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் நாளை நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகல்பத்து விழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ரத்தினக்கிளி தலையில் நாகாபரணம்,பவளமாலை,அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நம்பெருமாளின் முன்னழகைக் காட்டிலும், பெருமாளின் பின்னழகைக் காணவே பக்தர்கள் கூடுவர். அந்த அளவிற்கு அலங்காரமாக இருந்தார் நம்பெருமாள். பல்வேறு சிறப்புகளுடைய இத்திருவிழாவில் நாச்சியார் திருக்கோலத்துக்கு ஒரு காரணமும் உண்டு. ரங்கநாதர் தன்னை தரிசிக்க வந்தவர்களை " மம மாயா துரத்யா என்னுடைய மாயையைக் கடக்க சொன்னாராம். மண்ணாசை பொன்னாசை, பெண்ணாசை. இந்த மூன்று ஆசைகளிலும் பெண்ணாசையை ஒழிப்பது கடினம். ஏனெனில் ஒரு ஜீவன் சரீரமெடுக்க ஆரம்பித்த காலம் முதல் பெண்ணாசை இருந்து வருகிறது.

Srirangam vaikunta ekadasi Sorgavasal Tiruapu tomorrow Namperumal blessed as Mohini

நான் பூண்டிருக்கும் மோகினி வேஷத்தில் மயங்கியதால் அசுரர்கள் அமிர்தத்தையடைவதை இழந்தார்கள். எனவே நீங்களும் பெண்ணாசையில் மயங்காமல் " பரம்த் ருஷ்ட்வா நிவர்த்தந்தே " என்றும் , " மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள்கைவிட்டு " என்றும் சொல்லுகிறபடி நாளைய தினம் ஏகாதசியன்று தான் காட்டிக் கொடுக்கும் மார்க்கத்தைக் கண்டுரைத்து அனுஷ்டித்தால் எல்லாவி தமான மாயையில் இருந்தும் விடுபட்டு, எனது வைகுந்த நாட்டை அடைவீர்களென்று உபதேசிப்பதாகும்.

வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நாளை அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.

தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளுவார். அதனைத் தொடர்ந்து காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வருவார்.

அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார். காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும்.

Srirangam vaikunta ekadasi Sorgavasal Tiruapu tomorrow Namperumal blessed as Mohini

திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல், 2ம் தேதி முதல், 7ஆம் தேதி வரை, பகல், 1 மணி முதல், இரவு, 8 மணி வரை திறந்திருக்கும். 8ம் தேதி மாலை, 4 மணி முதல், இரவு, 8.30 மணி வரை திறந்திருக்கும். 9ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான, 2ம் தேதி முதல், ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து ஏழாம் திருநாளான, 8ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான, 9ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11ஆம் தேதி தீர்த்தவாரியும், 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளனர். நாளைய தினம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்று கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடன், கூடுதலாக, 92 கேமராக்கள் இணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விழா நாட்களில், காவிரிப் பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு போலீசார் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

English summary
On the occasion of Vaikunta Ekadasi, the Sorgavasal called Parampadavasal is going to be opened at Srirangam Ranganathar temple tomorrow. Today is the 10th day of Pakal patthu festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X