திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு..விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்..தங்க ரதத்தில் மலையப்பசுவாமி உலா
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தங்க ரதத்தில் உலா வந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 2022ஆம் ஆண்டில் மட்டும் 1,441.34 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கையாக அளித்துள்ளனர்.

இந்தியாவின் பணக்கார கோவிலான திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
ஏழை பணக்காரர்கள் என அனைவருக்குமே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா போல வைகுண்ட ஏகாதசி விழாவும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருமலை திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகக் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் அளவுள்ள மலர்கள் மற்றும் பழங்கள் ஆகியவை கொண்டு கோயிலில் வெளிப்புறம், உள்புறம், பலிபீடம், கொடிமரம் மற்றும் வைகுண்ட வாசல் போன்ற இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது ஏழுமலையான் ஆலயம்.
இன்று நள்ளிரவு 12 மணிக்குத் திருப்பதி ஏழுமலையானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 12.05 மணிக்குப் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தரிசன டிக்கெட் பெற்ற பத்தாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக டிக்கெட் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
காலை ஆறு மணிக்கு மேல் இலவச தரிசன டிக்கெட் மற்றும் 300 ரூபாய் கொடுத்த ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி நாளில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் ஆனது பத்து நாட்கள் திறந்து இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொர்க்கவாசல் தரிசனத்திற்காக தினமும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள ஒன்பது மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் வாங்குவதற்காக பக்தர்கள் குவிந்துள்ள காரணத்தினால் ஏராளமான தள்ளுமுள்ளு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தங்க ரதத்தில் உலா வந்து மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். பணக்காரர்கள் லட்சக்கணக்கில் பணத்தை உண்டியலில் செலுத்தினாலும் ஏழை மக்கள் தங்களால் இயன்ற அளவு உண்டியலில் செலுத்துவார்கள். இந்த ஆண்டு ரூ.ரூ1,441.34 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.
கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022ஆம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம்தேதி வரை என மொத்தம் 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மொத்தமாக 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications