மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அரசு இணையதளம் - என்னென்ன வசதிகள்..இனி ஈசியா காணிக்கை செலுத்தலாம்
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தகவல்களுடன், புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவிலுக்கு நன்கொடை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம்.
மதுரை மக்களை கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறாள் அன்னை மீனாட்சி. தூங்க நகரம்.. நான்மாடக்கூடல்... கூடல் நகர் என்ற பல்வேறு சிறப்புகளைக்கொண்டது மதுரை மாநகரம். பழமையும் பெருமையும் கொண்ட சிறப்பு வாய்ந்த நகரம் மதுரை.
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

மதுரையை அரசாளும் மீனாட்சி
மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. எனவே கோயிலுக்குச் செல்பவர்கள் கிழக்கு வீதியிலுள்ள அம்மன் சன்னிதி வழியாகச் செல்வது வழக்கம். இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. இக்கோயில் அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

இந்திரன் வணங்கிய சிவலிங்கம்
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது.

கோவில் சிறப்புகள்
மதுரை மீனாட்சி ஆலயம் பல சிறப்புகளை கொண்டுள்ளது.15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

பொற்றாமரைக்குளம்
ஆயிரம் கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. 600 வருடங்களுக்கு மேலான கட்டுமானத்தில் உருவாகியதும், மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கோவிலின் உட்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அளவில் பொற்றாமரை குளம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்பை அறிந்து ஏராளமான வெளிநாட்டினரும் வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம்
பல சிறப்புகளைக் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழக அரசு சார்பில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது.

தமிழக அரசு இணைய தளம்
தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

என்னென்ன வசதிகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் எந்த நேரத்தில் என்னென்ன பூஜைகள் நடைபெறும், எந்த மாதத்தில் என்ன திருவிழாக்கள் நடைபெறும். இ சேவைகள் என்னென்ன.. கோவிலின் சிறப்புகளை அழகிய மண்டபங்களை புகைப்பட வடிவத்தில் முப்பரிமாண காட்சிகளைப் பார்வையிடலாம். கோவிலுக்கு நன்கொடை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications