For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி.. நாராயணன் நாமம் சொன்னால் சொர்க்கவாசல் திறக்கும்..பிறவிப்பயன் அடையலாம்

Google Oneindia Tamil News

சென்னை: வைகுண்ட ஏகாதசி திதியில் சொர்க்கவாசல் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விடமுடியாது. புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கத்திற்கு சென்று இறைவனின் பாதத்தை அடையமுடியும். ஏகாதசியில் பகவான் விஷ்ணுவின் நாமம் சொல்லி, அவன் சிந்தனையாகவே இருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று வணங்கினால் பிறவிப்பயனை அடையலாம்.

வைணவ ஸ்தலங்களில் பகல் பத்து இராப்பத்து என்று சொல்லக்கூடிய பகல் பத்து முடிந்து ராப்பத்து தொடங்கும் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியான இன்று அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வருவார்.

Vaikunta ekadasi day chanting Narayanas name will open the Sorgavasal you can attain rebirth

ஏகாதசி என்ற சொல்லுக்கு ஸ்ரீமந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை. ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத கைசிக ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்டஏகாதசியே மிக விசேஷம்.

ஞானேந்திரியங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் கை, கால், வாக்கு, பிறப்புறுப்பு, கழிவு உறுப்பு மனம் என்னும் பதினொன்றையும் ஒன்றிணைத்து கடவுளைக் குறித்து செய்யும் விரத வழிபாடு ஏகாதசி விரதம். தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை இவ்விரதம் அளிக்கிறது.

ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இய லாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தரிசிப்பது மிகச்சிறப்பு. பூலோகத்தில் முதன் முதலில் சொர்க்க வாசல் திறந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பண்டரிபுரம் விட்டலன், குருவாயூரப்பன் துவாரகை கிருஷ்ணர் கோவில்களில் ஏகாதசிக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக கூடும்.

 வைகுண்ட ஏகாதசி..ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு..பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் வைகுண்ட ஏகாதசி..ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு..பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

இதற்கான புராண நிகழ்வு என்னவென்றால், தேவர்களுக்கு இடையூறு செய்த அசுரர்களான மது, கைடபரை அழிக்க முற்பட்டார் மகா விஷ்ணு. ஆனால் அவர்கள் சரணடைந்தனர். காரணம் இருவரும் விஷ்ணுவின் காதில் இருந்து தோன்றியவர்கள். தங்களின் அருட்சக்தியால் உருவான எங்களை கொல்லாமல், என்றென்றும் வைகுண்டத்தில் தங்கியிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என வேண்டினர்.

விஷ்ணுவும் சம்மதித்தார். மேலும் அவரிடம், சுவாமி, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீரங்கத்தின் வடக்கு வாசல் வழியே தாங்கள் எழுந்தருளும் போது தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் பாவம் நீங்கி முக்தி இன்பத்தை அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி திதியில் சொர்க்கவாசல் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விடமுடியாது. புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கத்திற்கு சென்று இறைவனின் பாதத்தை அடையமுடியும்.

வைகுண்ட ஏகாதசி தினமான இன்றைய தினம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை தல்லாகுளம் வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை ஆறு முப்பது மணிக்கு உற்சவமூர்த்தியான பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.அதே நேரங்களில் அழகர் கோவில்,முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் கூடலழகர் பெருமாள் கோவில் உட்பட அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரங்கநாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் கருவறையின் பின்புறம் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதியில் வேணுகோபால சுவாமி, பாமா, ருக்குமணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அதிகாலை 5.40 மணியளவில் கோவிலின் அமைந்துள்ள வைகுந்த வாயில் திறக்கப்பட்டு சிறப்பு தீபஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைந்து அண்ணாமலையார் மற்றும் வேணுகோபாலசாமிகளை தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே சிவ ஸ்தலங்களில் வைகுந்த வாயில் திறப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க வாசல் நிகழ்சி சிறப்பாக நடைபெற்றது. தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
பூக்கலால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமித பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்பூர தேரோட்டம் மிக முக்கியமான திருவிழாவாகும். அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து மற்றும் ஆண்டாள் மார்கழியில் நீராடும் எண்ணைக் காப்பு உற்சவம் வருடந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா என முழக்கமிட்டனர். ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள், இதை தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். இன்று திறக்கப்பட்ட இந்த பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்கு சென்று வருவதாக ஐதீகம்.எனவே உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபத்தில் கலந்து கொண்டனர்.

வரும் ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை முக்கிய நிகழ்வான மார்கழி நீராட்டு உற்சவம் எனப்படும் எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள். இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்துவிட்டார் என்று கிராமங்களில் சொல்வார்கள். வாழ்நாள் முழுவதும் இறை பக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவார்கள் என்பதால் அவர்கள் நிச்சயம் சொர்கத்திற்கு செல்வது உறுதி.

English summary
On Vaikunta Ekadasi tithi the Sorgavasal is fully open. For that, not everyone can enter Vaikunta. Only the devotees can go to heaven and touch the Lord's feet on Vaikunta Ekadasi day. On Ekadasi, chanting Lord Vishnu's name and worshiping him through the sorgavasal while being a thought, one can attain rebirth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X