தன் மூத்த மகனுக்காக நெப்போலியன் செய்த நல்ல விஷயம்.. இந்த மனசு தான் கடவுள்! குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷை போல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது மையோபதி மருத்துவமனையை தொடங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் நெப்போலியனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமடைந்த நெப்போலியன் அரசியலிலும் ஈடுபட்டு எம்எல்ஏவாக தன்னுடைய பணியை தொடங்கி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். ஆனால் இப்போது அரசியல் மற்றும் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

நெப்போலியன் மகன் திருமணம்
கடந்த வருடத்தில் தான் தன்னுடைய மூத்த மகனின் திருமணம் பிரம்மாண்டமாக ஜப்பானில் நடந்தது. நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் தனுஷுக்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோய் ஏற்பட்டு இருக்கிறது. பல வருடம் கழித்து தவமாய் தவமிருந்து பிறந்த மகனுக்கு தசைசிதைவு நோய் என்றதும் வருத்தத்தின் உச்சத்துக்கு சென்ற நெப்போலியன் குடும்பம் எப்படியாவது இதை சரிசெய்யலாம் என்று பல மருத்துவமனைக்கு ஏறி இறங்கி இருக்கின்றனர்.
தசைசிதைவு பாதிப்பு
ஆனாலும் பத்து வயதிற்கு மேலாக தனுஷால் நடக்க முடியாமல் வீல்சேரில் வாழ்க்கை தொடங்கி இருக்கிறது. தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய சந்தோஷத்தை நிறைவேற்றி வைப்பதற்காக நெப்போலியன் பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் பல மருத்துவ சிகிச்சைகள் எடுத்தும் நெப்போலியன் மகனுக்கு சரி ஆகாமல் இருந்த சமயத்தில் தான் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு மையோபதி மருத்துவத்தால் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மயோபதி மருத்துவமனை
ஆனால் இந்த சிகிச்சையை ஆரம்பத்தில் தொடங்கி இருந்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும் என்று அதற்கு பிறகு தான் நெப்போலியனுக்கு தெரிய வந்தது. அந்த நேரத்தில் நெப்போலியன் மகன் திருநெல்வேலியில் சிகிச்சை எடுப்பதை தெரிந்து இதேபோல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பலர் திருநெல்வேலி மருத்துவமனைக்கு வந்து இருக்கின்றனர். அதனால் அங்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் நெப்போலியன் அந்த மருத்துவமனையை பெரிதாக கட்டி தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார்.

விமர்சனங்கள்
பல வருடங்களாக தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்து கொண்டிருக்கும் நெப்போலியனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதே நேரத்தில் கடந்த வருடத்தில் நெப்போலியன் மகனுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தபோது பல விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் அதையெல்லாம் நெப்போலியனும் அவருடைய குடும்பத்தினரும் கண்டுகொள்ளவில்லை. தன் மகன் திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த நெப்போலியன் குடும்பத்தினர் இப்போது அமெரிக்காவிற்கு பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
நெப்போலியன் தொடங்கிய மருத்துவமனை
இந்த நிலையில் நேற்று நெப்போலியன் நண்பரான ஜீவன் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் நெப்போலியன் புதியதாக தொடங்கியிருக்கும் மயோபதி மருத்துவமனையின் பூஜை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. ஏற்கனவே திருநெல்வேலியில் ஒரு மருத்துவமனையை கட்டி பல நாடுகளில் இருந்தும் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்போது நெப்போலியன் தொடங்கி இருக்கும் மயோபதி மருத்துவமனையாலும் பல குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும் என்பது பலருடைய வாழ்த்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications