Bigg Boss 8: போட்டியாளராக ரிவ்யூவர்.. போன வருஷம் மிஸ் ஆனது இப்போ ஓகே.. சன் டிவி நடிகையின் கணவர்தான்
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் ப்ரோமோ சூட் தொடங்கப்பட்டது என்ற செய்திகள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியே இருக்கிறது. அதில் சீரியல் நடிகையின் கணவரும் தயாரிப்பாளருமான பிக்பாஸ் ரிவியூவர் ஒருவர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி வருகிறது. இதுவரைக்கும் ஏழு சீசன் முடிவடைந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால் இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. ஏழு சீசன்களாக தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் தான் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து யார் அவருக்கு பதிலாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட் தொடங்கப்பட்டதாக வீடியோக்கள் வெளியானது. அதில் விஜய் சேதுபதி தான் இந்த சீசனின் தொகுப்பாளராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
காரணம் புது தொகுப்பாளர் வரிசையில் போட்டியாளர்களும் பரபரப்பு ஏற்படுத்துபவர்களாக இருந்தால்தான் இந்த சீசன் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும். அதற்காக பிக் பாஸ் அணி பிரத்தியேகமாக அதிகமான போட்டியாளர்களை இறக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த அருண் முதல் போட்டியாளராக கலந்து கொள்வதாக தகவல் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து ஒரு சிலருடைய பெயர்கள் அடங்கிய உத்தேச பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தயாரிப்பாளர் ரவீந்தர் களம் இறங்குவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு சீசனிலும் ரிவ்யூ செய்து வருகிறார். அதிலும் கடந்த சீசனில் ரிவ்யூ செய்யும்போது அவர் மருத்துவமனையில் மாஸ்க் உதவியுடன் மூச்சு விட்டிருந்த நிலையிலும் தன்னுடைய கடமை உணர்ச்சி தவறாமல் அந்த மாஸ்கோடு ரிவ்யூ செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அதுபோல வனிதா மற்றும் அனிதா சம்பத் போன்றவர்களோடு இவர் கருத்து மோதல்களில் ஏற்பட்டதும் பலருக்கும் தெரிந்ததுதான். ஏற்கனவே இவர் கடந்த சீசனில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்கு திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் கடைசியில் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த சீசனில் அவர் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
உத்தேச பட்டியலில் ரவீந்தர் பெயரும் இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்திருக்கும் ரவீந்திரன் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக கண்டென்ட் கொடுப்பார் என்று அவரை இறக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் நிகழ்ச்சியின் சுவாரசியம் கூடும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை குறையும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்க கமெண்ட்டை தட்டி விடுங்க பாஸ்.












Click it and Unblock the Notifications