முத்தம் கொடுத்துட்டாங்க.. அடுத்து குழந்தை பெத்துக்க முடியுமா? மோகன் ஜி கேள்விக்கு, கார்த்திக் சுப்புராஜ் பதிலடி
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம் ஏற்கெனவே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. படத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, திருநங்கைகள் குறித்துப் பேசிய இயக்குநர் மோகன் ஜியின் கருத்துகளும் இப்போது சர்ச்சையாகியிருக்கின்றன. ஒரு விவாத நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவரிடம் அவர் எழுப்பிய கேள்விகள்தான் இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம். அந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தனது எதிர்ப்பை ஒரு வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
இயக்குனர் மோகன் ஜி கேட்ட கேள்வி
மோகன் ஜி அந்த விவாதத்தில் திருநங்கை ஒருவரிடம், பாரதி படத்தில் கிளைமாக்ஸில் அந்தக் காதலனும் திருநகையும் முத்தம் கொடுப்பது போல முடித்து விட்டார்கள். இரண்டாவது பாகம் எடுத்தால் எப்படி எடுப்பார்கள்? திருமணம் செய்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்குப் பதிலளித்த அந்தத் திருநங்கை, ஒருவர் தன்னை விரும்பித் திருமணம் செய்துகொண்டால் இருவரும் அன்போடும் மகிழ்ச்சியோடும் ஒன்றாக வாழ முடியும் என்றும், வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான் முக்கியம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட வீடியோ
ஆனால், விவாதம் அத்துடன் முடியவில்லை. திருநங்கைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் கார்த்திக் சுப்புராஜ் கடுமையாக எதிர்த்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட வீடியோவில், "இதை ஒரு கேள்வி என்று சொல்வதைக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணின் முகத்துக்கு நேராக, பொதுவெளியில், தொலைக்காட்சியிலும் யூடியூப் போன்ற ஊடகங்களிலும் இப்படியொரு கருத்தை முன்வைப்பது அவர்களை அவமதிப்பதுபோல இருக்கிறது. இதை அவர்களுக்கு எதிரான உளவியல் ரீதியான வன்முறையாகத்தான் பார்க்கிறேன்.
திருநங்கைகளையும் மற்றவர்களைப் போலச் சமமான மனிதர்களாகப் பார்க்க வேண்டும். அதுதான் அடிப்படை மனிதநேயம். ஆனால், அதற்கு மாறாக பொதுவெளியில் திருநங்கைகளுக்கு எதிரான கருத்துகளை இவ்வளவு வெளிப்படையாக முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமணம் செய்துகொள்வதன் நோக்கம் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும்தானா? அதுதான் வாழ்க்கையின் லட்சியமா? நாய், பன்னிகூடத்தான் குட்டி போடுகிறது. மனிதர்களுடைய வாழ்க்கையை குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை மட்டுமே அடிப்படையாக வைத்து மதிப்பிட முடியுமா?
குழந்தையை வைத்து பஞ்சாயத்து
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்துக்குப் பிறகும் பல்வேறு காரணங்களால் குழந்தை பிறக்காமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக வாழத் தகுதியற்றவர்களா? அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளக் கூடாதா? குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான இறுதி இலக்காக இருக்க முடியாது.
திருநங்கைகள் தங்களுக்கான அன்பையும் துணையையும் தேடுவதும், திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ விரும்புவதும் மற்ற மனிதர்களைப் போலவே இயல்பான ஒன்றுதான். அப்படியிருக்கும்போது, அவர்களுடைய திருமண வாழ்க்கையைக் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை மட்டுமே வைத்து மதிப்பிடுவது தவறான அணுகுமுறை. மோகன் ஜி, உங்களுடைய கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கார்த்திக் சுப்புராஜ் பேசியிருக்கிறார்.
மோகன் ஜி பேச்சுக்கு எதிர்ப்பு
இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான். திருநங்கைகள் திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவது குறித்துக் கேள்வி எழுப்பும்போது, அவர்களுடைய வாழ்க்கையின் மதிப்பையே குழந்தை பெற்றுக்கொள்ளுவதுடன் ஒப்பிட முடியுமா என்பதுதான் இங்கு எழும் அடிப்படையான கேள்வி.
குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் எனப் பலரும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்களுடைய அன்புக்கும் உறவுக்கும் குழந்தை பிறப்பதுதான் சான்று என்று யாரும் சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது, திருநங்கைகள் தங்களுக்குப் பிடித்த ஒருவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதைக் கேள்விக்குள்ளாக்குவது ஏன் என்ற விவாதமும் இப்போது எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
