இஸ்லாமிய சிறுமியின் குரலில் முருகன் பாடல்.. மெய்மறந்து கேட்கும் ரசிகர்கள்! பாராட்டும், விமர்சனமும்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த சிறுமி ஒருவர் முருகன் பாடலைப் பாடியிருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்தச் சிறுமியின் குரலைக் கேட்டவர்கள், பாடலைப் பாடிய விதத்தைப் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில், இந்தப் பாடலை அவர் பாடியதை வைத்து சில கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
சரிகமப நிகழ்ச்சியில் பாடி வரும் ஹஸ்னா முபாரக் என்ற சிறுமிதான் இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இவர் 'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' என்ற பக்தி பாடலைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை அவர் பாடும் விதம், குரலில் இருக்கும் இனிமை என எல்லாமே கேட்பவர்களை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, பாடலைப் பாடும்போது அவர் காட்டும் ரியாக்ஷனும் குரலில் இருக்கும் இனிமையும் பலரையும் மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை கேட்க வைத்திருக்கிறது.

இஸ்லாமிய சிறுமி
இந்த பாடலை பாடியவர் இஸ்லாமிய பின்னணியைச் சேர்ந்த சிறுமி என்பதுதான் இந்த வீடியோ இவ்வளவு பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாகவே இசைக்கு மொழி, மதம் என்று எந்த எல்லையும் கிடையாது என்று சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால், அதை ஒரு சிறுமி தனது குரலால் உணர்த்தியிருக்கிறார் என்று பலரும் பாராட்டுகிறார்கள். 'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' என்பது முருகனைப் போற்றிப் பாடப்படும் பிரபலமான பாடல். இப்படிப்பட்ட ஒரு பக்திப் பாடலை ஹஸ்னா அழகாகப் பாடியிருப்பதைப் பார்த்த பலரும், இசையை மதத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு பாடலை ரசிப்பதற்கும், அதன் இசையில் மெய்மறப்பதற்கும் ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. பாடலின் வரிகள், இசை, குரல் ஆகியவை மனதுக்குப் பிடித்துவிட்டால் யாராக இருந்தாலும் ரசிக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில், ஹஸ்னாவின் பாடல் பலரையும் கவர்ந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிரும் பலரும், இசைக்கு மதம் கிடையாது என்பதை இந்தக் குழந்தையின் குரல் நிரூபித்துவிட்டது, இவ்வளவு அழகான குரலை கேட்கும்போது மதத்தைப் பற்றிய சிந்தனையே வரவில்லை, குழந்தையின் திறமையைப் பாராட்டுவதுதான் முக்கியம் என்பது போன்ற கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
பாடலின் ஒவ்வொரு வரியையும் அவர் பாடும் விதம் ரசிகர்களைக் கவர்ந்திருப்பதால், ஹஸ்னாவின் குரலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சரிகமப நிகழ்ச்சியில் இன்னும் இதுபோன்ற பாடல்களை அவர் பாட வேண்டும் என்றும் பலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் பாடலைப் பாடியதற்காக ஹஸ்னாவை பாராட்டுபவர்கள் மட்டுமல்லாமல் சிலர் இந்த நிகழ்வை வேறொரு கோணத்தில் பார்க்கிறார்கள்.
ஒரு குழந்தை எந்தப் பாடலைப் பாட வேண்டும் என்பதைவிட, அந்தக் குழந்தையை வைத்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் என்ன நோக்கத்தில் இதைச் செய்கிறார்கள் என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை வைத்து இந்து மதத்தின் பக்தி பாடலைப் பாட வைப்பதன் அவசியம் என்ன என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மதங்களைக் கடந்து இசையை ரசிப்பது தவறில்லை என்றாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதுபோன்ற காட்சிகளைப் பயன்படுத்தி TRP அதிகரிக்க முயற்சி செய்கின்றனவா என்ற சந்தேகத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள்.
குறிப்பாக, நிகழ்ச்சியனன் வியூஸ் அதிகரிப்பதற்காகவும் உங்கள் மீடியாவில் இந்த வீடியோக்கள் அதிகமாகப் பகிரப்பட வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற நிகழ்வுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றனவா? என்ற விமர்சனமும் எழுகிறது. அதே நேரத்தில், இந்த விவாதத்தில் சிறுமியின் திறமையை மறந்துவிடக் கூடாது என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. ஒரு பாடலைப் பாடியதற்காக அந்தக் குழந்தையை விமர்சிப்பதைவிட, அவளுடைய குரலையும் இசைத் திறமையையும் தனியாகப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
