இன்டர்போல், CBI, FBI உட்பட.. 42 ஆண்டுகளாக.. பல நாட்டு போலீஸ் படை தேடிய சுகுமார குரூப் கண்டுபிடிப்பு?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்திய குற்றவியல் வரலாற்றிலேயே சுமார் 42 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான சுகுமார குரூப், தென்கிழக்கு ஆசிய நாடான புருனேயில் ஜான் மேனன் என்ற பெயரில் தொழிலதிபராக வாழ்ந்து வருவதாக வெளியாகி இருக்கும் புதிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய கேரளா க்ரைம் பிராஞ்ச் இண்டர்போல் உதவியை நாட முடிவு செய்துள்ளது.

kerala

மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து கிடைத்த ரகசியத் தகவல்கள்

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் வசிக்கும் மலையாளிகள் மற்றும் பிற இந்தியர்கள் மூலம் கேரளா காவல்துறை அதிகாரிகளுக்கு சில அதிகாரப்பூர்வமற்ற ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, புருனேயில் மர்மமான தொழிலதிபராக வலம் வரும் ஜான் மேனன் என்பவரின் முகம் மற்றும் உடல் அமைப்பு, சுகுமார குரூப்பின் முகச்சாயலை அச்சு அசல் ஒத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பொருட்கள் விநியோக ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஜான் மேனனின் கூட்டாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் மீது வழக்கு ஒன்று பதிவாகியிருந்தது. அப்போது ஜான் மேனன் தன்னை மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த ஒரு கேரளக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இண்டர்போல் தலையீடு

சுகுமார குரூப்பின் தற்போதைய வயதுக்கு ஏற்றவாறு தோற்றமளிக்கும் ஜான் மேனனின் புகைப்படம் கேரளா போலீசாரின் கைக்கு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளா க்ரைம் பிராஞ்ச் ஐ.ஜி ஷ்யாம் சுந்தர், முழு விவரங்களுடன் இண்டர்போலுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் எழுத உள்ளார். புருனே அதிகாரிகளின் உதவியுடன் கைரேகை, மருத்துவ ஆவணங்கள் மற்றும் அடையாளங்களை ஒப்பிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுகுமார குரூப்புக்கு தற்போது 80 வயதிற்கு மேல் இருக்கும் என்பதாலும், அவருக்குக் கடுமையான இதய நோய் இருந்ததாலும், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று க்ரைம் பிராஞ்ச் கருதி இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தது. ஆனால், முன்னாள் புலனாய்வு அதிகாரி அலி அக்பர், சுகுமார குரூப் உயிருடன் இருப்பதற்கான 169 ஆவண ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

1984 கொடூரக் கொலை & காப்பீட்டு மோசடி பின்னணி

1984-ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று கேரளாவையே உலுக்கிய கொடூரக் கொலை அரங்கேறியது. வெளிநாட்டில் பணியாற்றி வந்த சுகுமார குரூப், தனது பெயரில் உள்ள 8 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையை மோசடியாகப் பெற ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டினார்.

தான் விபத்தில் இறந்துவிட்டதாக உலகை நம்ப வைக்க, தன்னைப் போன்றே உடல்வாகு கொண்ட திரைப்பட விநியோக பிரதிநிதியான சாக்கோ என்பவரை காரில் ஏற்றிச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், சாக்கோவின் உடலை காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர். ஆனால், தடயவியல் ஆய்வில் உயிரிழந்தது சுகுமார குரூப் அல்ல, சாக்கோ என்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட போதிலும், சுகுமார குரூப் தலைமறைவானார்.

அவர் தலைமறைவாகும் முன் பலரை பல கோடிகளுக்கு ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அதாவது கேரளாவிலும், வடஇந்தியாவிலும் பலரை அவர் பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் தடயம்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அங்கு பணியாற்றிய ரத்னம் என்ற மலையாளி செவிலியரால் சுகுமார குரூப் கடைசியாகப் பார்க்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், கேரளா தனிப்படை போலீசார் அங்கு செல்வதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதன் பிறகு நாடு முழுவதும் சாமியார் வேடம் போட்டு இவர் சுற்றி உள்ளார். இவர் மீது இருந்த சில வழக்குகள் தொடர்பாக சிபிஐ இவரை சோதனை செய்தது. அதேபோல் இந்தியாவின் பல மாநில போலீஸ்கள், மற்ற நாடுகளின் பெடரல் போலீசார் பலர் இவர் மீது வழக்குகளை பதிவு செய்து விசாரணை செய்தனர்.

வட இந்திய மாநிலங்கள், அரபு நாடுகள் எனப் பல இடங்களில் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது 42 ஆண்டுகளுக்குப் பிறகு, புருனேயில் 'ஜான் மேனன்' என்ற பெயரில் அவர் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் மீண்டும் இந்திய அளவில் தீவிர கவனத்தைப் பெற்றுள்ளன. இண்டர்போல் மேற்கொள்ளும் தீவிர விசாரணையின் முடிவிலேயே, 40 ஆண்டு கால குற்றவியல் புதிருக்கு இறுதி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+