போலீசாரை கொல்ல சதி.. வழக்கில் இறுகும் பிடி.. செல்போன்களை கேரள நீதிமன்றத்தில் ஒப்படைத்த நடிகர் திலீப்
திருவனந்தபுரம் : நடிகை பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் செல்போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் கைதாகினர். மேலும் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டபோது உடந்தையாக இருந்ததாக நடிகையின் கார் ஓட்டுநர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மலையாள நடிகர் திலீப்
பாதிக்கப்பட்ட நடிகை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது . இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று அவர் விடுதலையான நிலையில் இந்த வழக்கு விசாரணை கொச்சியில் பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் புகார்
இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பை கைது செய்ய தீவிரம் காட்டி வந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட கேரள காவல்துறைக்கு எதிராக நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகவும், நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த போது எடுத்த வீடியோவை சிலர் பார்த்ததாகவும் பிரபல இயக்குனரான பாலச்சந்திர குமார் கூறினார். இதையடுத்து போலீசாரை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது கடுமையான பிரிவுகளில் மேலும் ஒரு வழக்கு கேரள காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டது.

திலீப் கைதாக வாய்ப்பு
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உள்ளிட்ட ஆறுபேர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது திலீப்புக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என கேரள போலீசார் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் சதி செய்தது உண்மைதான் என சதித்திட்டம் தீட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுனில் குமார் என்பவரின் தாய் சோபனா கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று திலீப் முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு மீண்டும் வர உள்ள நிலையில், நடிகர் திலீப் ஜாமீன் கோரிய வழக்கில் பிப்ரவரி 2ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் நடிகர் திலீப், அவரது சகோதரர் உள்ளிட்டோர் பயன்படுத்தி ஆறு செல்போன்களை இன்று காலை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. தன்னுடைய செல்போன்கள் தடயவியல் ஆய்வு பரிசோதனைக்காக மும்பைக்கு அனுப்பி இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செல்போன்கள் ஒப்படைப்பு
இந்தக் கோரிக்கையை கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் அனுப்பியிருந்த செல்போன்கள் கொச்சிக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது. இதையடுத்து அவரது போன்களும் அவரது சகோதரர் மற்றும் தங்கை கணவர் உள்ளிட்ட அவர் பயன்படுத்திய 6 செல்போன்களையும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து அவருடைய வழக்கறிஞர் இன்று கேரள உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்தார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் எனவும் பிப்ரவரி 2ஆம் தேதி ஜாமீன் குறித்த தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications