கை கொடுத்த அமித்ஷா கணக்கு.. கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரத்தை தட்டி தூக்கிய பாஜக!
திருவனந்தபுரம்: தேசிய அளவில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தாலும், கேரளாவில் மட்டும் கோட்டையை பிடிக்க முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்று, தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
தற்போது கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இரு கூட்டணிகளும் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் சரிசமமான முன்னிலை வகிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்தங்கியுள்ளது, ஆனால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் தன் பலத்தைக் காட்டியுள்ளது.

தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு இடதுசாரி கூட்டணியுடன் கடுமையான போட்டி நிலவியது. கடந்த தேர்தலில், நூலிழையில் இங்கு இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து திருவனந்தபுரம் மேயராக 21 வயது ஆர்யா ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். இவர் நாட்டின் இளம் மேயராக இருந்தார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜகவுக்கு வழக்கமாக செல்வாக்கு அதிகம். ஆனால், இந்த செல்வாக்கை வாக்குகளாக மாற்றி பாஜகவால் அதிகாரத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை வரலாற்றை பாஜக மாற்றி எழுதியிருக்கிறது.
மூன்று அடுக்கு பஞ்சாயத்து முடிவுகளின்படி, கிராம பஞ்சாயத்துகளில் இடதுசாரி கூட்டணி 360 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 350 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ 31 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. வட்டார பஞ்சாயத்துகளில் இடதுசாரி 73 இடங்களிலும், காங்கிரஸ்+ 68 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. என்.டி.ஏ 2 இடங்களைப் பிடித்துள்ளது.
மாவட்ட பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை, இடதுசாரி கூட்டணி 8 இடங்களிலும், காங்கிரஸ்+ 6 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன. நகரங்களிலும், பெருநகரங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கணிசமான முன்னிலை பெற்றுள்ளது. அதேசமயம், பஞ்சாயத்து அமைப்புகளில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது.
காலை 10:15 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளில் நான்கு மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இடதுசாரி ஒரு மாநகராட்சியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. இடதுசாரி கூட்டணி கொல்லம் மற்றும் கோழிக்கோடு மாநகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications