சபரிமலை அரவணைப்பாயாசத்தில் நச்சு! உடனடியாக தடுத்து நிறுத்திய நீதிமன்றம்.. 6 லட்சம் டின் பாயாசம் தேக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது இருப்பில் உள்ள சுமார் 6 லட்சம் டின் அரவணைப்பாயாசம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படக் கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தற்போது அரவணைப்பாயாசம் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலில் அரவணைப்பாயாசம் என்பது ஐயப்பனுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பாயாசமாகும். இங்கு தயாரிக்கப்படும் அரவணைப்பாயாசத்தின் சுவை போல வேறு எங்கும் பாயாசம் இதே சுவையுடன் கிடைப்பதில்லை. தற்போது மகர விளக்கு பூஜை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பக்கதர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஐயப்பனுக்கு என தயாரித்து படைக்கப்பட்ட இந்த அரவணைப்பாயாசம் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும்.
ஆனால் இதில் சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது, இந்த அரவணைப்பாயாசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை ஏலக்காய் வியாபாரி ஒருவர் முன் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் அரவணைப்பாயாசத்திற்கு ஏலக்காயை சபரிமலை தேவஸ்தானம் ஏலம் மூலம் கொள்முதல் செய்யதது. இந்த ஏலத்தில் பங்கேற்று தோல்வியடைந்த ஒரு வியாபாரிதான் இக்குற்றச்சாட்டை முன்வைத்து மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றம்
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவணைப்பாயாசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காயின் தரத்தை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இந்த அரவணைப்பாயாசம் திருவனந்தபுரத்தின் உணவுப் பொருள் ஆய்வு கழகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, அரவணைப்பாயாசத்தில் பயன்படுத்தப்பட்ட ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. இதனை தேவசம்போர்டு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை கண்டு அதிர்ந்த நீதிமன்றம், இவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த பிரசாதத்தை எப்படி பக்தர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது.

ஏலக்காய்
இதற்கு பதிலளித்த தேவசம்போர்டு ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட ஏலக்காய் போதாததால் உள்ளூர் சந்தையில் ஏலக்காயை மீண்டும் கொள்முதல் செய்ததாகவும், எனவேதான் இந்த பிரச்னை எழுந்துள்ளது எனவும் கூறியிருந்தது. எப்படி இருந்தாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவ்வாறு உள்ள பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுத்தால் அது கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், பக்தர்களின் நலனை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் கூறியிருந்தது. இதன் தொடர்ச்சியாக நிலுவையில் உள்ள பிரசாதங்கள் குறித்த விவரங்களையும் கேட்டு பெற்றது.

சீல்
அதன்படி சுமார் 6 லட்சம் டின் அரவணைப்பாயாசம் கையிருப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த மொத்த பிரசாதத்தையும் உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்றும், இது பக்தர்களுக்கு வழங்கப்படாமல் முற்றிலுமாக அழிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து தற்போது சபரிமலை பக்தர்களுக்கு அரவணைப்பாயாசம் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நிலுவையில் இருப்பது சீல் வைக்கப்பட்டுள்ளதால் இனி புதியதாக பாயாசத்தை தயாரித்துதான் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவசம்போர்டு கூறியுள்ளது. எப்படியாயினும் நாளை முதல் புதிய அரவணைப்பாயாசம் விநியோகிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து
ஏற்கெனவே சபரிமலை கோயிலில் பல சர்ச்சைகள் மேலெழுந்திருக்கிறது. அதாவது சபரிமலையின் பம்பை நதியில் அபாயகரமான 'கோலிபார்ம் பாக்டீரியாக்களின்' எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது. இந்த பாக்டீரியா அதிகம் இருக்கும் நீர் நிலைகளில் குளித்தால் மலேரியா, டைபாய்டு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நீர்நிலைகளில் இந்த பாக்டீரியாக்களின் அளவு 500 இருந்தாலே ஆபத்தானதாகும். ஆனால் பம்பையில் இது 6000 என்கிற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications